சென்னை:தமிழகத்தின் சில மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று (டிச.21) வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தமிழத்தில், 24ஆம் தேதிவரை, லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 25ஆம் தேதி அன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை: வடகிழக்கு மழையைப் பொருத்தவரை, கடந்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது. மேலும் 24 மணிநேரத்தில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியில் 9 செ.மீ மழையும், திருக்குவளையில் 7 செ.மீ. மழையும், தலைஞாயிறு பகுதியில் 5 செ.மீ மழையும், திருப்பூண்டி, மயிலாடுதுறையில் தலா 4 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
6% அதிகமான மழைப்பொழிவு:இதேபோல் திருவாரூர், திருநெல்வேலி, தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், காரைக்கால், ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை 3 செ.மீ முதல் 1 செ.மீ வரை பதிவாகி உள்ளன. மேலும், வடகிழக்கு மழையானது கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 21ஆம் தேதிவரை தமிழகம், புதுவை அகிய இடங்களில் பெய்த மழையின் அளவு 452 மி.மீ ஆகும். இந்த காலக்கட்டத்தில் இயல்பான அளவு 426 மி.மீ இது இயல்பை விட 6% சதவீதம் அதிகம்.
சென்னை பகுதியில் வானிலை:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இதைத்தொடர்ந்து அடுத்த, 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கழுத்தளவு வெள்ளம்.. 39 மணிநேரம் மரத்தின் மீது அமர்ந்து உயிர் தப்பிய விவசாயி.. ஈடிவி பாரத் உடன் பகிர்ந்த பகீர் நிமிடங்கள்!