சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற நவ.27ஆம் தேதி புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், "வருகின்ற நவ.27 ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்ததாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.
மழை வாய்ப்பு பகுதிகள்:நாளை(நவ 25) கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், இன்று(நவ 24) திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதனைத் தொடர்ந்து வருகின்ற நவ.26-ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதேப்போல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்திற்கான மழை நிலவரம்: தமிழ்நாட்டிலுள்ள உள்மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக கடலோர மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் மிக லேசனா மழை பதிவாகியுள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில், குன்னூரில் அதிகபட்சமாக 9 செ.மீ மழை பதிவாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய காலத்தில் இருந்து இன்று(நவ-24) வரை பதிவான மழை 29.செ.மீ- ஆக பதிவாகியுள்ளது. இந்த காலக்கட்டத்தில் சராசரியான மழைப்பொழிவு அளவு 32செ.மீ ஆக இருக்க வேண்டிய நிலையில், தற்போது இயல்பைவிட 10% குறைவான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:வருகின்ற நவ.27ஆம் தேதி வங்க கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதையடுத்து, வங்க கடல் பகுதிகள் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்படுகின்றது" என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஆண்டின் இறுதி வரை 3,216 கன அடி நீரை தமிழகத்திற்கு திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை!