சென்னை: தமிழ்நாடு, இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்க சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே தெரிவித்திருந்த நிலையில், தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதில், "குறிப்பாக சென்னை திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொருத்தவரையில் அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்து வரக்கூடிய அக்.30, 31 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதைத் தொடர்ந்து நவம்பர் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரையிலும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது" என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!