சென்னை:இது தொடர்பாகச்சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஜூன் 19) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று(ஜூன் 19) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 21 முதல் இடி மின்னலுடன் மழை:வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் நாளை (ஜூன் 20) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜூன் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய மிதமான / கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னை விமான நிலையம் 16 செ.மீ, தரமணி ARG (சென்னை), ஆலந்தூர் (சென்னை) தலா 14 செ.மீ, செம்பரம்பாக்கம் ARG (காஞ்சிபுரம்) 13 செ.மீ, செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 11 செ.மீ, அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 10 செ.மீ, மேற்குத் தாம்பரம் ARG (செங்கல்பட்டு), ACS மருத்துவக் கல்லூரி (காஞ்சிபுரம்), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), DGP அலுவலகம் (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம் தலா 9 செ.மீ, கொரட்டூர் (திருவள்ளூர்), MGR நகர் (சென்னை) தலா 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.