சென்னை:தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், தெற்கு அந்தமான் கடல் மற்றம் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் 26ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சூழலுக்கு வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று (நவ.23) சென்னை வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, "நேற்று தமிழ்நாடு பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மேற்கு திசையில் நகர்ந்து இன்று(நவ.23) கேரள பகுதிகள் மீது நிலவி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளதையடுத்து, பெரும்பான்மையான இடங்களில் மழை பெய்துள்ளது. 45 இடங்களில் கனமழையும், 8 இடங்களில் மிக கனமழையும், இரண்டு இடங்களில் அதிக கனமழையும் பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை வாய்ப்பு பகுதிகள்:அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 37செ.மீ. மழையும், கோத்தகிரியில் 24 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. அடுத்து வரக்கூடிய மூன்று தினங்களை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையை பொறுத்தவரையில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் கனமழையும் ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.