தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மாவட்டங்களில் கன மழை : சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு - சென்னையில் தொடர் மழை

சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்தில் ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்

By

Published : Nov 7, 2020, 1:06 PM IST

தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று (நவ.07) காலை முதல் பல்வேறு பகுதிகளில் இடைவெளி விட்டு மழைப்பொழிவு இருந்தது. குறிப்பாக மீனம்பாக்கம், ஆலந்தூர், திருவோத்தூர், தரமணி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வந்தது. காலையில் பெய்த திடீர் மழையால் ஏற்பட்ட சாலை நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இந்நிலையில் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

தமிழ்நாடு பகுதியில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக , அடுத்த 48 மணிநேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும். மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

அடுத்த 72 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை, அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம் (சென்டிமீட்டரில்) : இடையப்பட்டி (மதுரை ) 7 செமீ, காரியாபட்டி (விருதுநகர் ) 6 செமீ, விரகனுர் அணை (மதுரை ), மானாமதுரை (சிவகங்கை ), பேரையூர் (மதுரை ) தலா 5 செமீ, திருபுவனம் (சிவகங்கை ), தல்லாகுளம் (மதுரை), பிளவக்கல் (விருதுநகர்), காயல்பட்டினம் (தூத்துக்குடி), கூடலூர் (தேனி), திருச்செந்தூர் (தூத்துக்குடி), சோழவந்தான் (மதுரை) தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம் : ரசிகர்களின் வாழ்த்து மழையில் கமல்!

ABOUT THE AUTHOR

...view details