திருவண்ணாமலையைச் சேர்ந்த சி.எம். சிவபாபு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், "கரோனா ஊரடங்கால் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி செல்லும் 10 வயது முதல் 15 வயது வரை உடைய பெண் குழந்தைகளை கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள தனியார் ஆலைகளுக்கு பெற்றோர்களே வேலைக்கு அனுப்பியுள்ளனர்.
அங்கு அந்தச் சிறுமிகளுக்கு சொற்ப ஊதியத்துக்கு கடுமையான வேலை வழங்கப்படுகின்றன. பள்ளிக்கூடங்கள் திறந்தாலும் அவர்களால் பள்ளிக்கு திரும்ப இயலாதது என்ற அச்சம் நிலவுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி என்ற கிராமத்திலிருந்து மட்டும் ஏராளமான பள்ளி செல்லும் மாணவிகள் கோவை, திருப்பூர், அவிநாசி பகுதிகளில் உள்ள ஆலைகளில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். எனவே, அவர்களை மீட்க தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என். கிருபாகரன், வி.எம். வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி செல்லும் மாணவிகள் கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் உள்ள ஆலைகளில் வேலைக்கு சென்றுள்ளனரா, என்பது குறித்தும், மனுதாரரின் பின்புலம் குறித்தும் தமிழ்நாடு அரசு நிலையறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.