சென்னை:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு ஐந்து வருடத்திற்கு செயல்பட மத்திய அரசு தடை விதிக்கப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கிளைகளின் நிர்வாகிகள் அலுவலகங்கள் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அடுத்தடுத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே பயங்கரவாதத் தொடர்பு இருப்பதாகக் கூறி, தேசிய புலனாய்வு அமைப்புகள் சோதனை மற்றும் கைது நடவடிக்கைகள் மேற்கொண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் அமைப்பு தொடர்பான இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாட்டில் இருந்து மத்திய அரசுக்கு தெரியாமல் நிதியானது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்பான நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு கிடைக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறையினர் தொடர்ந்து இந்த சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். சில இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பும் அமலாக்கத்துறையும் இணைந்து இந்த சோதனைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக சென்னை வேப்பேரியில் உள்ள தக்கர் தெருவில் வசித்து வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் மாநிலத் தலைவர் முகமது இஸ்மாயில் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர் இரண்டு வாகனங்களில் சென்று சோதனை மேற்கொண்டனர்.