திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தாலுகாவிலுள்ள கோனாம்பேடு, நாராயணபுரம் கிராமங்களில் ஆழ்துளைக் கிணறுகளில் சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுவதை தடுக்கக் கோரியும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் கோனாம்பேடு கிராம பொது நல சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து, எட்டு வாரங்களில் அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை அமல்படுத்தாததையடுத்து, கோனாம்பேடு கிராம பொது நல சங்கம் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த ஐந்து ஆழ்துளைக் கிணறுகளையும் ‘சீல்’ வைத்துவிட்டதாகவும், இதுசம்பந்தமாக இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.