சென்னை: ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கற்றல் குறைபாடுகளைக் களைவதற்காக இல்லம் தேடி கல்வித் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கிவைத்தார். சென்னை மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் விழிப்புணர்வு பரப்புரையை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசுப் பள்ளியில் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி இன்று (நவம்பர் 25) தொடங்கிவைத்தார்.
பள்ளி மாணவர்களிடையே கலந்துரையாடி கற்றல் பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய ஆட்சியர் விஜயராணி, "பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் குறைபாடுகளைக் களைவதற்காக இல்லம் தேடி கல்வித் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இல்லம் தேடி கல்வித் திட்டம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதன்மூலம் பெற்றோரிடம் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்கள் சேர்க்கப்பட்டு மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் நடைபெறும்" எனத் தெரிவித்தார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் பேட்டி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது எனச் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்தும் வேதா இல்லத்தை தீபக், தீபாவிடம் ஒப்படைப்பது குறித்து செய்தியாளர் கேட்டபோது, இது குறித்து அரசிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனக் கூறினார்.
இதையும் படிங்க: விமான போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்