சென்னை பிரசாத் ஸ்டுடியோ இடத்தில் இருந்து இசையமைப்பாளர் இளையராஜா வெளியேற வேண்டும் என ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. இடத்தை காலி செய்வது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையேயான வழக்கு சென்னை 17ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தானே எழுதிய இசை கோர்ப்புகள், தனக்குச் சொந்தமான இசை கருவிகள், விருதுகள் உள்ளிட்ட பொருள்களை எடுத்துக்கொள்ள தன்னை அனுமதிக்க வேண்டும். தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, இளையராஜாவை அனுமதிக்க கடும் ஆட்சேபம் தெரிவித்த பிரசாத் ஸ்டுடியோ தரப்பு, பின்னர் சில நிபந்தனைகளுடன் அனுமதிக்க ஒப்புதல் தெரிவித்தது.
இளையராஜா இதனை ஏற்று பிரமானப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பான வழக்கு இன்று (டிச.23) விசாரணைக்கு வந்தபோது, பிரசாத் ஸ்டுடியோவின் நிபந்தனைகளின்படி, கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை வாபஸ் பெறுவதாகவும், இடத்திற்கு உரிமை கோர மாட்டேன் என்றும் இளையராஜாவின் தரப்பில் மெமோ தாக்கல் செய்யப்பட்டது.