சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று(ஏப்.18), சமூகப் போராளியான இளையபெருமாளுக்கு சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவு அரங்கம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதுதொடர்பாக விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், "ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் ஒளி விளக்காக மட்டுமல்ல; நெறிசார்ந்த அரசியலின் அடையாளமாகவும் விளங்கியவர் இளையபெருமாள். சமூக சீர்திருத்தத்தின் பெருமைமிகு தலைவர்களான அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, என்.சிவராஜ், எல்.சி.குருசாமி, சுவாமி சகஜானந்தர் ஆகியோர் வரிசையில் கம்பீரமாக நின்று போராடியவர்களில் ஒருவர்தான் பெரியவர் எல். இளையபெருமாள். நந்தனை மறித்த சிதம்பரம் மண்ணில் பிறந்து, நாடு முழுவதும் பட்டியலின மக்களுக்காக அடைபட்டு இருந்த உரிமை வாசலைத் திறந்தவர் இளையபெருமாள்.
பள்ளியில் படிக்கும்போது இரட்டைப் பானை முறையைப் பார்க்கிறார். பள்ளிக்குள் மறைந்திருந்து இரவு நேரத்தில் பானைகளை உடைக்கிறார், இளையபெருமாள். இப்படி அவர் தொடர்ச்சியாக உடைத்ததால்தான், இரட்டைப் பானை முறை அந்தக் காலத்தில் அந்த வட்டாரத்தில் நீக்கப்பட்டது. ராணுவத்தில் சேர்கிறார், அங்கும் பாகுபாடு காட்டப்பட்டது. உடனடியாக, துணிச்சலோடு உயர் அதிகாரிக்குப் புகார் செய்கிறார்; அந்தப் பாகுபாடு களையப்படுகிறது. ஓராண்டு காலத்திலேயே ராணுவத்தில் இருந்து விலகி மக்கள் பணியாற்ற வந்துவிடுகிறார். ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்டம் - தஞ்சை மாவட்டத்தில் 1940 முதல் 1970 வரையில் நடந்த மிகப்பெரிய சமூகப்போராட்டங்களை நடத்தியவர், பெரியவர் இளைய பெருமாள்.
பட்டியலின மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட இவரது போராட்டங்கள்தான் காரணம். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட இளைய பெருமாளுக்கு, சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பொதுத் தேர்தலில், 1952ஆம் ஆண்டு, கடலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கிறது; அதில் வெற்றியும் பெற்றார். அப்போது அவருக்கு வயது 27. டெல்லி சென்ற அவர், அண்ணல் அம்பேத்கரை சந்தித்தார். 'இவ்வளவு இளம் வயதில் நாடாளுமன்ற உறுப்பினராக ஆகி வந்திருக்கிறீர்களே? அந்த மக்களுக்காக இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள்?' என்று கேட்டிருக்கிறார்.
அப்போது, தென்னாற்காடு மாவட்டம், தஞ்சை மாவட்டங்களில் தான் நடத்திய மக்கள் போராட்டங்கள், தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்களை இவர் பட்டியல் போட்டுச் சொன்னதைக் கேட்டு, அம்பேத்கரே வியப்படைந்திருக்கிறார், இளையபெருமாள் அவர்களைப் பாராட்டி இருக்கிறார்கள். 1980 முதல் 1984 வரை சென்னை எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும், அகில இந்திய தீண்டாமை ஒழிப்புக் கமிட்டித் தலைவராகவும் இருந்தவர் பெரியவர், இளையபெருமாள்.