சென்னை: நுண்ணுயிரிகளால் விண்வெளி வீரர்களின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதன் தாக்கத்தைக் குறைக்க, விண்வெளி ஆய்வு நிலையங்களை கிருமி நீக்கம் செய்வதற்கான உத்திகளை வகுக்க இந்த ஆய்வு உதவிகரமாக இருக்கும்.
விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் தங்கள் பயணத்தின்போது நோய் எதிர்ப்பு சக்தியில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். அத்துடன் பூமியிலிருந்து அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய மருத்துவ வசதிகள் குறைந்த அளவிலேயே இருக்கும். எனவே, விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருக்கும் நுண்ணுயிரிகளைப் பற்றி ஆய்வு மேற்கொள்வதும், குறுகியகால மற்றும் நீண்டகால விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் வீரர்களின் ஆரோக்கியம் தொடர்பான அபாயங்களைப் புரிந்துகொள்வதும் அவசியமாகிறது.
சர்வதேச விண்வெளி நிலையத்தின் மேற்பரப்பில் கிளெப்சியல்லா நிமோனியா (Klebsiella pnemoniae) பாக்டீரியாவின் ஆதிக்கம் இருப்பதாக முந்தைய கண்டுபிடிப்புகளில் தெரிய வந்ததால், அதனைப் பின்பற்றியே தற்போதைய ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. இதே நோய்க் கிருமிதான் நிமோனியா உள்ளிட்ட மருத்துவமனையில் உருவாகும் இதர நோய்த் தொற்றுகளுக்கு (nosocomical infections) காரணம் என அறியப்படுகிறது.
இந்த பாக்டீரியா தனக்கு நெருக்கமாக உள்ள நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை எந்த அளவுக்குப் பாதிக்கிறது என்பதைப் பற்றியும், அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்தும் புரிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்கள் பேரார்வம் கொண்டிருந்தனர்.
மூன்று முறை விண்வெளிப் பயணங்களின்போது, சர்வதேச விண்வெளி நிலையத்தில் 7 இடங்களில் எடுக்கப்பட்ட நுண்ணுயிர் மாதிரிகளின் தரவுகளைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டனர். சர்வதேச விண்வெளி மையத்தில் காணப்படும் முக்கிய நுண்ணுயிரியான கிளெப்சியல்லா நிமோனியா, தனக்கு அருகிலிருக்கும் பல்வேறு நுண்ணுயிரிகளுக்குக் குறிப்பாக பாண்டோயாஜினஸ் (Pantoeagenus) பாக்டீரியாக்களுக்கும் நன்மை பயக்கும் என அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.
இந்த பாக்டீரியா இருப்பதால் அஸ்பெர்கிலஸ் (Aspergillus) பூஞ்சையின் வளர்ச்சி தடுக்கப்படுவதும் தெரிய வந்தது. இதுதொடர்பான கணக்கீடுகள் அனைத்தும் ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, கிளெப்சியல்லா நிமோனியா இருப்பது அஸ்பெர்கிலஸ் பூஞ்சையின் வளர்ச்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.