தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம்: கேரளா விரைந்த மத்திய குற்றப் பிரிவு போலீஸ் - ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம்

சென்னை: ஐஐடி மாணவி தற்கொலை குறித்து அவருடைய தாய் மற்றும் சகோதரியிடம் விசாரிக்க மத்தியக் குற்றப்பிரிவுக் காவல்துறையினர் கேரளா விரைந்துள்ளனர்.

Fatima family

By

Published : Nov 19, 2019, 4:39 PM IST

சென்னை ஐஐடியில் முதுகலை முதலாமாண்டு படித்துவந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீப் நவம்பர் 8 ஆம் தேதி, ஐஐடி வளாகத்தின் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி ஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப், பேராசிரியர்கள் சிலர் அளித்த மத ரீதியான துன்புறுத்தலால்தான் தற்கொலை முடிவுக்கு வந்ததாகவும், ஃபாத்திமா தன் செல்போனில் குறிப்பு எழுதி வைத்துள்ளதால், தனது மகளது தற்கொலையில் மர்மம் இருப்பது குறித்து விசாரிக்க தமிழ்நாடு முதலமைச்சர் காவல்துறை இயக்குநர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோரிடம் புகாரளித்தார்.

இதனையடுத்து இந்த வழக்கு சென்னை மத்தியக் குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டது. விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர், மாணவியின் தற்கொலை குறித்து நேற்று முன்தினம் அப்துல் லத்தீப்பிடம் கேட்டறிந்தனர். மாணவி எழுதியுள்ள குறிப்பின் அடிப்படையில், ஐஐடி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட மூன்று பேராசிரியர்களிடமும் நேற்றிரவு வரை விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது.

இந்நிலையில், விசாரணையின் அடுத்தகட்டமாக, விடுமுறைக்குச் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள ஃபாத்திமாவின் தோழிகளிடம், காவல்துறையினர் அவரவர் இடங்களுக்கே நேரில் சென்று விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர்.

மாணவியின் அறையிலிருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் சைபர் குற்ற ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுக்காக காத்திருக்கும் மத்தியக் குற்றப்பிரிவுக் காவல்துறையினர், மத ரீதியாகவோ, மதிப்பெண்களை குறைத்தோ மாணவர்கள் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்களா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

மேலும், மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை செய்வதற்கு முன் குடும்பத்தினரிடம் இதுதொடர்பாக ஏதும் பேசினாரா? ஐஐடியில் நிலவும் சூழல் குறித்து எதையும் பகிர்ந்துள்ளாரா? என்பது பற்றி ஃபாத்திமாவின் தாய் மற்றும் சகோதரியிடம் கேட்டறிய சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details