இந்தியாவில் சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகங்கள் என கருதப்படும் ஐஐடிக்கள், ஐஐஎம்களில் சாதிய பாகுபாடு உள்ளது என தொடர்ந்து புகார்கள் வந்தாலும் இது தொடர்பான உறுதியான நடவடிக்கைகள் ஏதும் இதுவரை எடுக்கப்படவில்லை. சென்னை ஐஐடியில் மாணவர் சேர்க்கையிலும், பேராசிரியர்கள் நியமனத்திலும் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இதற்குத் தகுதியான நபர்கள் கிடைப்பதில்லை என்பதே பெரும்பாலான நேரங்களில் பதிலாக அமைகிறது. சென்னை ஐஐடியில் பயில்பவர்களில் பெரும்பாலானவர்கள் பார்ப்பனர்களாகவும், பொது பிரிவைச் சேர்ந்த மற்ற சமூகத்தினராகவும் உள்ளனர்.
இதுகுறித்து பேராசிரியர் விபின் அளித்துள்ள புகார் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பது குறித்து அவரிடம் கேட்டோம். விரிவாகவே பேசினார் விபின்.
இவர் புகழ்பெற்ற Pantheon-Sorbonne பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழங்களில் கல்வி பயின்றவர். ஐஐடி பல்கலைக்கழகத்தில் எந்த வகையில் சாதிய பாகுபாடு வெளிப்படுத்தப்படுகிறது என்பதை விளக்குகிறார்.
குறிப்பிட்ட சிலருக்கு முக்கியத்துவம் கொடுப்பது (Preferrnetial treatement), தனது குழுவைச் சேராதவர்களை ஒதுக்கி வைப்பது (Exclusion) மற்றும் அவமானப்படுத்துவது (humiliation) எனஇதனை அவர் மூன்றாகப் பிரிக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஐஐடியில் சேர்ந்தபோது நான் புதிதாக பாடம் எடுக்க விரும்பினேன். ஆனால் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதேநேரம் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த மற்றொரு பேராசிரியருக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது. ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவவன் மூலம் இங்கு சாதிய ஆதிக்கம் செலுத்தப்படுகிறது.
ஆராய்ச்சிகளில் விலக்கப்படுகிறோம்
சென்னை ஐஐடியில் பல்வேறு ஆராய்ச்சி குழுக்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலும் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர்களே உறுப்பினர்களாவும், வழிநடத்துபவர்களாகவும் உள்ளனர். இதுபோன்ற குழுக்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலமே ஆராய்ச்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியும்.
இதுபோன்ற ஆராய்ச்சிக் குழுக்களில் பணியாற்றும் வாய்ப்பு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு, தலித் பேராசிரியர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இவற்றில் சேர நான் விருப்பம் தெரிவித்தும் எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இங்கு குறிப்பிட்ட உயர் ஆராய்ச்சிகளில் இருந்து விலக்கி வைக்கப்படுகிறோம்.
சாதிய பாகுபாடு குறித்து நான் புகார் தெரிவிக்கையில் அதனை தெரியாதது போல் மீண்டும் மீண்டும் என்னை விவரிக்கச் சொல்கிறார்கள். இது பல நேரங்களில் மிகவும் மன வேதனையைத் தருகிறது.
இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும்
இது தவிரவும், ஐஐடி ஒரு உண்டு உறைவிட பல்கலைக்கழகம் என்பதால் பலரும் அங்கே வசிப்பவர்கள் தங்களது சாதிய குறியீடுகள் வெளிப்படுத்தப்படும், சாதாரண மக்களை தரக் குறைவாக நடத்துவதும் சர்வ சாதரணமாக நடைபெறுகிறது.
பல்வேறு சீர்திருத்தங்கள் இங்கு செய்யப்பட வேண்டும் என்றால் குறைந்தப்பட்ச அரசியலமைப்பு சட்டத்தால் பாதுகாக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும். உள்ளே இருக்கும் பெரும்பாலானவர்கள், மொழி, பாலினம், அரசியல் கொள்கை கடந்து சாதியால் ஒன்றுபட்டிருக்கிறார்கள்.
சாதிய அடிப்படைவாதிகள் ஒருபுறம் வெளிப்படையாக பாகுபாடு காட்டுவதை போல் தங்களை முற்போக்குவாதிகள், கம்யூனிஸ்ட்கள் என கூறிக்கொள்ளும் ஒரு சில நபர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் அல்லது மௌனமாக இருந்து இதற்கு துணைபோகின்றனர். இதில் ஒருசிலர் தன்னைத் தானே முற்போக்குவாதிகள் என மாய உலகில் வாழ்கின்றனர். இதன்மூலம் அவர்கள் மறைமுகமாகப் பயனடைவதால் இதனை எதிர்க்க முன்வரவில்லை.
இதுபோன்ற சூழல்களில்தான் பலதரப்பட்ட, வெவ்வேறு பின்னணியைக் கொண்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர் சேர்க்கை மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு பிற்பட்டத்தபட்ட துறைத் தலைவர் அங்கிருந்தால் எனக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.
தலித் பேராசிரியருக்கு பிரதிநிதித்துவம்
அதேநேரம், பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் தலித் பேராசிரியர்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாக பல்கலைக்கழகம் அமைய வேண்டும்.
மெட்ராஸ் ஐஐடியில் மாணவர்களின் சேர்க்கை எழுத்து தேர்வின் கீழ் நடத்தப்படுவதால் அதில் சாதிய சார்புகளுக்கு இடம் மிகக் குறைவாக உள்ளது. ஆனால், பேராசிரியர் நியமனத்தில் சாதி மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. ஐஐடி பேராசிரியர்கள் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவதில்லை. இங்குள்ள பெரும்பான்மையான பேராசிரியர்கள் ஓரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
கேள்வித்தாளை வடிவமைப்பதிலிருந்து நேர்காணலில் கேள்விகளை கேட்பதுவரை எல்லாம் பார்ப்பன சமூகத்தைச் சார்ந்தவர்கள் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தெரிந்தோ, தங்களுக்கே அறியாமலோ சார்புடன் அவர்கள் நடந்துகொள்ள வாய்ப்புள்ளது.
ஒருவரை நீங்கள் தேர்வு செய்ய வேண்டுமென நினைத்தால் எளிமையான கேள்விகளைக் கேட்கலாம். வேண்டாம் என நினைத்தால் கடினமான கேள்விகளால் அவர்களை வெளியேற்றலாம். இப்போதுள்ள நடைமுறையில் சாதிசார்பற்ற ஆட்களைத் தேர்வு செய்ய எந்த ஊக்கமும் இல்லை.
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்த நிலையை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களுக்கும் இங்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும். புதிய பல்கலைக்கழங்கள் தொடங்கும் நடைமுறைகள் எளிமையாக்கப்பட வேண்டும்.
இதனால் போட்டி ஏற்படும் போது திறமைவாய்ந்த மாணவர்களுக்கும், பேராசியர்களுக்கும் காட்டப்படும் பாகுபாடு பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும்” என்று உறுதியாக முடித்தார் விபின்.