சென்னை:சென்னை ஐஐடி சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்துடன் இணைந்து நடைபாதை பொறியியல் மற்றும் நுண்ணறிவுப் போக்குவரத்து அமைப்புகளை மேம்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளது.
ஹைட்ரஜன் செல் போக்குவரத்து, வாகன வகைப்படுத்தும் தானியங்கி (Automatic Vehicle Classification), பெரும் கட்டண அமைப்புகள் (Novel Toll systems), விபத்து மேலாண்மை அமைப்புகள் (Incident management system), பயணியின் தகவல் அமைப்புகள் (Traveller information system), பாஸ்டேக் தரவு பகுப்பாய்வு (FastTAG Data Analytics), வாகனப் போக்குவரத்தை கணித்து பாதுகாப்பான போக்குவரத்தை அளித்தல் போன்றவற்றின் ஆய்வுகளில் சென்னை ஐஐடி பங்கெடுக்க உள்ளது.
இருக்கை உருவாக்கம்
இதற்காக, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சென்னை ஐஐடியில் இருக்கை உருவாக்கப்பட்டுள்ளது. தலைமைப் பேராசிரியர் இந்த அமர்வின் செயல் ஆலோசகராகச் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைப் பொறியியல் துறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்துதல் (Research & Developement) மீது கவனம் செலுத்துவதுதான் இந்த இருக்கை உருவாக்கப்பட்டதற்கான முக்கியக் காரணம்.
தலைமைப் பேராசிரியர் இந்த இருக்கையின் தரநிலை மற்றும் ஆராய்ச்சி (Standard & Research) பிரிவுடன் தொடர்பில் இருப்பார். இந்த இருக்கை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைப் பொறியியல் துறையில் தேவை அடிப்படையிலான ஆராய்ச்சியை எளிதாக்கும்.
இந்த இருக்கைகான புரிந்துணர்வு ஒப்பந்தம் காணொலி வாயிலான கூட்டத்தில் நேற்று (ஆக. 17) கையெழுத்தானது. இந்தக் கூட்டத்தில் சென்னை ஐஐடி டீன் மகேஷ் பஞ்சாக்னுலா, இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, சாலை மேம்பாட்டுத் துறையின் பொது இயக்குநர் இந்திரேஷ் பாண்டே, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் செயலாளர் கிரிதர் அரமனே, சென்னை ஐஐடி கட்டுமான பொறியியல் துறையின் தலைவர் மனு சந்தானம் ஆகியோர் பங்கேற்றனர்.