சென்னை ஐஐடி விடுதி அறையில் கடந்த 8ஆம் தேதி இரவு மனிதநேயம் பாடப்பிரிவு படித்து வந்த முதுகலை மாணவி ஃபாத்திமா லத்தீப் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கேரளாவைச் சேர்ந்த ஃபாத்திமாவின் தேர்வு மதிப்பெண் குறைந்ததே தற்கொலைக்கான காரணம் என அப்போது கூறப்பட்டது.
ஆனால், தற்கொலைக்கான காரணம் குறித்து ஃபாத்திமா இறப்பதற்கு முன், தனது அலைபேசியில் பதிவுசெய்து வைத்திருந்த சிலத் தகவலின் அடிப்படையில் மாணவியின் தந்தை அப்துல் லத்தீப், தனது மகள் மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை செய்யவில்லை என்றும், ஐஐடி பேராசிரியர்கள் சிலர் கொடுத்த மன அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்துள்ளார் என்றும் பகீரங்கத் தகவலை வெளியிட்டார்.
மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு காவல் துறை இயக்குநர், சென்னை காவல் ஆணையர் ஆகியோரை நேரில் சந்தித்து ஃபாத்திமாவின் பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களுடன் புகார் மனுவையும் அவர் அளித்தார்.