சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆசிரிய உறுப்பினர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் இணைந்து நகரங்களுக்கு இடையே சரக்குகளை எளிதாகவும் திறமையாகவும் கொண்டு செல்வதற்கு உதவும் மொபைல் செயலியை வடிவமைத்து உருவாக்கியுள்ளனர். 'ஆப்ட்ரூட்' (OptRoute) என்றழைக்கப்படும் இந்த மொபைல்போன் செயலியானது கமிஷனோ, ஆன்போர்டிங் கட்டணமோ ஏதுமின்றி ஓட்டுநரையும் நுகர்வோரையும் இணைக்கிறது.
இடைத்தரகர்கள் யாருமின்றி நுகர்வோரிடம் இருந்து பணம் நேரடியாக ஓட்டுநருக்கு சென்றுவிடும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐஐடி மெட்ராஸ் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் பேராசிரியர் என்.எஸ்.நாராயணசுவாமி, ஐஐடி முன்னாள் மாணவர் திரு.அனுஜ்ஃபுலியா ஆகியோர் இணைந்து உருவாக்கிய ஐஐடி மெட்ராஸ்-ன் தொழில் ஊக்குவிப்பு ஸ்டார்ட்அப் நிறுவனமான ஆப்ட்ரூட் லாஜிஸ்டிக்ஸ் மூலம் செயலியின் முதல் பதிப்பு உருவாக்கப்பட்டு வணிகமயமாக்கப்பட்டது.
இந்த செயலியின் அடிப்படைக் கருத்துகள் மெக்சிகோ நாட்டின் கான்கன் நகரில் நடைபெற்ற 2020 மரபணு மற்றும் பரிணாமக் கணக்கீடு மாநாட்டில் (https://doi.org/10.1145/3377930.3389804) முன்வைக்கப்பட்டன. பேக்கிங், வாகன இடத்தை திறமையாகக் கையாளும் முறை போன்ற அம்சங்களையும் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கியுள்ளது. போதிய அளவுக்கு ஆரம்பகட்ட செயல்பாடுகள் நடைபெற்றதும் இவை செயலியில் சேர்க்கப்பட்டுவிடும்.
இந்த செயலி தீர்க்கக் கூடிய பிரச்சனைகள் குறித்து ஐஐடி மெட்ராஸ் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் பேராசிரியர் நாராயணசுவாமி கூறும்போது, "ஆப்ட்ரூட் செயலியானது சரக்கு ஏற்றுதல் மற்றும் போக்குவரத்துக் களத்தில் ஓட்டுநர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆகியோருக்கு இடையே உள்ள இணைப்பில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
திரும்பி வர ரிடர்ன் லோடு கிடைக்காமல் இருப்பது, வாகனத் திறனை குறைவாகப் பயன்படுத்துவது ஆகியவை டிரான்ஸ்போர்ட் நடத்துவோர் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளாகும். தற்போதைய சந்தையில் இதன் செயல்பாடுகள் மிகவும் ஒழுங்கமைப்பின்றி குறைந்த பயன்பாட்டுடன் இருந்துவருகிறது. தேசிய தளவாடக் கொள்கை- 2022ல் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை ஈடுபடுத்துவது அவசியமாகிறது" எனக் குறிப்பிட்டார்.