சென்னை:சென்னையில் உள்ள ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஐடி மண்டி ஆராய்ச்சியாளர்கள், புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் கேம்ப்டோதெசின் உற்பத்தியை அதிகரிக்க, ‘நோத்தபோடைட்ஸ் நிமோனியானா’ தாவர செல்களை வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்தி வருகின்றனர்.
ஐஐடி மெட்ராஸ்-இன் தாவர செல் தொழில்நுட்ப ஆய்வக ஆராய்ச்சியாளர்கள், கணக்கீட்டுக் கருவிகளைப் பயன்படுத்தி எம்.நிமோனியானா (M.nimmoniana) தாவர செல்களுக்கான மரபணு அளவிலான வளர்சிதை மாற்ற மாதிரியை உருவாக்கியிருக்கின்றனர்.
கேம்ப்டோதெசின் மருந்தை உற்பத்தி செய்வதற்கு மூன்றாவது அதிக தேவையுள்ள ஆல்கலாய்டு எனப்படும் நச்சுப்பொருளை நோத்தபோடைட்ஸ் நிமோனியானா எனப்படும் அழிந்துவரும் தாவரத்திலிருந்து வணிக ரீதியாக இந்தியாவில் பிரித்தெடுப்பதால் புற்றுநோய்க்குச் சிகிச்சையாக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளை உற்பத்தி செய்வதற்குப் பெரிய ஊக்கமாக அமையும்.
புற்றுநோய் எதிர்ப்பு மருந்தான கேம்ப்டோதெசினுக்கு நிகரான மற்றும் அதிக பயனைத் தரும் மாற்று ஆதாரமாகத் தாவரத்திலிருந்து பெறப்படும் நுண்ணுயிரி ஒன்றை அடையாளம் கண்டிருப்பதாகக் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரை ஒன்றில், ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.
ஒரு டன் கேம்ப்டோதெசினைப் பிரித்தெடுக்க ஏறத்தாழ 1,000 டன் தாவரப் பொருட்கள் தேவைப்படுகின்றன. சந்தையில் தேவையைப் பூர்த்தி செய்ய அதிகளவில் அழித்ததன் காரணமாக, அதன் முக்கிய தாவர ஆதாரங்களுக்குச் சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு (IUCN) சிவப்புப் பட்டியலில் இடம்பெறச் செய்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் எம்.நிமோனியானாவின் எண்ணிக்கை 20 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிவைச் சந்தித்துள்ளது. மரபணு அளவிலான வளர்சிதை மாற்றத்திற்கான மாதிரியைப் பயன்படுத்தி தாவர செல்களில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும் தற்போதைய ஆராய்ச்சியில், ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி மாணவி சரயு முரளி, கம்ப்யூடேஷனல் சிஸ்டம்ஸ் உயிரி ஆய்வகத்தின் மசியா இப்ராஹிம், ஐஐடி மெட்ராஸ் உயிரித்தொழில் நுட்பத்துறை பேராசிரியர்களான கார்த்திக் ராமன், ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா ஆகியோருடன் ஐஐடி மண்டியின் மெட்டபோலிக் சிஸ்டம்ஸ் உயிரி ஆய்வகத்தின் ஷ்யாம் கே.மசகபல்லி, ஷகுன் சைனி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இது குறித்து முதன்மை ஆய்வாளரும் ஐஐடி மெட்ராஸ் உயிரி அறிவியல் துறையின் பூபத் மற்றும் ஜோதி மேத்தா பள்ளியின் பேராசிரியை ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “உயிரி செயல்முறை பொறியியல் கொள்கைகளுடன் வளர்சிதை மாற்றப் பொறியியலை ஒருங்கிணைப்பதன் மூலமாக, மேம்பட்ட மற்றும் நிலையான உற்பத்தியை உறுதிப்படுத்த முடியும். கேம்ப்டோதெசினுக்கு அதிகரித்து வரும் சந்தைத் தேவையைக் குறைவான நேரத்தில் பூர்த்தி செய்வதுடன் இயற்கை வளத்தைப் பாதுகாக்கவும் முடியும் எனக் குறிப்பிட்டார்.