சென்னை:சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், பால் கலப்படத்தை 30 விநாடிகளுக்குள் கண்டறியும் வகையில் முப்பரிமாண (3டி) கருவி ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த பேப்பர் பேஸ்டு கையடக்க கருவியை வைத்து, பாலில் கலப்படம் உள்ளதா? என நமது வீடுகளிலேயே பரிசோதனை செய்து பார்க்க முடியும். யூரியா, சலவை சோப்பு, சோப்பு, ஸ்டார்ச், ஹைட்ரஜன் பெராக்சைடு, சோடியம்-ஹைட்ரஜன்-கார்பனேட் உள்ளிட்ட பால் கலப்படத்துக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் பொருட்களை இந்த கருவி மூலம் கண்டறியலாம்.
பாலின் தூய்மையைக் கண்டறியும் வழக்கமான ஆய்வக அடிப்படையிலான பரிசோதனைக்கு கூடுதல் செலவும், கால விரயமும் ஏற்படுகிறது. ஆனால், புதிய தொழில்நுட்பத்தில் குறைந்த செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கருவியின் மூலம் குடிநீர், பழச்சாறு, மில்க் ஷேக் போன்றவற்றிலும் கலப்படம் உள்ளதா? எனப் பரிசோதனை செய்ய முடியும். இதில் எந்தவொரு திரவத்திலும் கலப்படத்தை சோதிக்க ஒரேயொரு மில்லி லிட்டர் மாதிரியே போதுமானது.
சென்னை ஐஐடி இயந்திரப் பொறியியல் துறை இணைப் பேராசிரியரான பல்லப் சின்ஹா மஹாபாத்ரா தலைமையில், ஆராய்ச்சியாளர்கள் சுபாஷிஸ் பட்டரி, பிரியங்கன் தத்தா ஆகியோரும் இணைந்து ஆராய்ச்சி செய்து இந்த கருவியை கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வுக் கட்டுரை மதிப்பாய்வு இதழான நேச்சரில் (https://doi.org/10.1038/s41598-022-17851-3) வெளியிடப்பட்டு உள்ளது.
இது குறித்து சென்னை ஐஐடியின் இயந்திரப் பொறியியல் துறையின் இணைப் பேராசிரியர் பல்லப் சின்ஹா மஹாபாத்ரா கூறும்போது, "3டி காகித அடிப்படையிலான இந்த நுண்திரவக் கருவி (microfluidic device) மேல் மற்றும் கீழ் உறைகளையும், சாண்ட்விச் அமைப்பிலான நடுத்தர அடுக்கையும் கொண்டதாகும். அடர்த்தியான திரவத்தையும் சீரான வேகத்தில் கொண்டு செல்லும் பணியை 3டி வடிவமைப்பு சரியாகச் செய்கிறது.