சென்னை:மும்பை கடல் பகுதியில் இருந்து ஒஎன்ஜிசி நிறுவனத்தின் மூலம் எண்ணெய் எடுக்கும் இயந்திரங்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து, பழுது பார்த்தல் உள்ளிட்ட மேலாண்மை ஆலோசனைகளை வழங்குவதற்கு சென்னை ஐஐடியின் கடல்சார் பொறியியல் துறையால் புதிய மென்பொருள் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மென்பொருளைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும், கடலுக்கு அடியில் 3 முதல் 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள எண்ணெய் குழாய்களின் உறுதித்தன்மை, செயல்பாடுகளை ஆய்வு செய்ய முடியும் என்பதால் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய ஆள்களை பயன்படுத்தத்தேவையில்லை. இதனால் பராமரிப்பு செலவு குறையும் என கடல்சார் பொறியியல் துறையின் தலைவர் நல்லையரசு தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய தொழில் நுட்பங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அளித்து வருகின்றனர். இந்நிலையில், கடல்சார் பொறியியல் துறையின் தலைவர் நல்லையரசு தலைமையிலான குழுவினர் ஒஎன்ஜிசி நிறுவனத்தின் நிதியுதவியுடன் கடந்த 4 ஆண்டுகளாக கடலில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆராயவும், குழாய்களின் உறுதித்தன்மையை தெரிந்து கொள்ளவும் சிம்ஸ் என்ற புதிய மென்பொருளை கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து பேராசிரியர் நல்லையரசு கூறும்போது, “கடலுக்கு அடியில் 4 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்து எண்ணெய் மும்பை கடல் பகுதியில் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான கட்டமைப்புகள் 25 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டன.
அதில் 330 தளங்கள் உள்ளன, இந்த தளங்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அப்போது தான் எண்ணெய் உற்பத்தியில் எந்தவிதமான பிரச்னையும் வராது. இதற்காக மனிதர்களை கடலுக்கு அடியில் இறக்க வேண்டும்.