பாதுகாப்பு மிகுந்த மின் பேரேட்டினை (Blockchain) அடிப்படையாகக் கொண்டு, மருத்துவ தரவுகளை பாதுகாப்புடன் பரிமாறிக்கொள்ளும் ‘பிளாக்டிராக்’ என்ற கைபேசி செயலியை சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் முதன்முதலாக உருவாக்கியுள்ளனர். கழகத்தின் மருத்துவமனையில் இந்தத் தொழில்நுட்பம் தற்போது சோதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு கொவிட்-19 பெருந்தொற்று உச்சநிலையில் இருந்தபோது இன்ஃபோசிஸின் நிறுவன சமூகப் பொறுப்பின் ஆதரவுடன் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. மின் பேரேட்டினை அடிப்படையாகக் கொண்ட புதுமையான கண்டுபிடிப்பின் வாயிலாக நோயாளிகள் பற்றிய தரவுகளின் உரிமையைப் பரவலாக்கி, தனிநபர் தகவல்களையும், மருத்துவ ஆவணங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்து, மருத்துவத் தகவல்களைப் பாதுகாப்பாக மின்னணு மயமாக்குவதே பிளாக்டிராக் செயலியின் முக்கியமான நோக்கமாகும்.
ஆண்ட்ராய்ட் செல்பேசிகளில் நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் தனித்தனியே இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. பலதரப்பட்ட மருத்துவமனைகள், நிறுவனங்கள், மற்றும் சுகாதார மையங்கள் இயங்குவதற்கு இந்த செயலி அனுமதி அளிக்கிறது.
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஆவணங்களைப் பயன்படுத்தி பிளாக்ட்ராக்கின் தொடர் ஏடு இணைப்பில் உள்ள எந்த ஒரு மருத்துவ நிறுவனத்தையும் நோயாளிகள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
சென்னை, இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் இயந்திரப் பொறியியல் துறையின் சிதைவுறா மதிப்பீட்டுக்கான மையத்தின் தொலைநிலை கண்டறிதல் பிரிவின் முன்னிலை ஆசிரியர் பேராசிரியர். பிரபு ராஜகோபால் தலைமையிலான குழுவினர் இந்த செயலியை உருவாக்கியுள்ளனர்.
இந்த செயலி பற்றி கருத்து தெரிவித்த பேராசிரியர் பிரபு ராஜகோபால், “மருத்துவத் தரவு மேலாண்மையைப் பாதுகாப்பதில் மின் பேரேட்டினை தொழில்நுட்பம் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதோடு, நாடு முழுவதும் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் நோயாளிகள் பற்றிய ஆவணங்களை தனித்துவம் வாய்ந்த வழியில் பாதுகாப்பாக மின்னணுமயமாக்குவதில் இந்தச் செயலி அபரிமிதமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்”, என்று நம்பிக்கை தெரிவித்தார்.
“தனிநபர் தரவுகளைப் பாதுகாப்பாகப் பெற்று, தனிப்பட்ட ஆவணங்களையும், மருத்துவ ஆவணங்களையும் தனிநபர்களும், மருத்துவச் சேவைகளை வழங்குவோரும் டிஜிட்டல் வழியாக சுலபமாகப் பெறுவதே, கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய அரசின் தேசிய மின்னணு சுகாதார இயக்கத்தின் நோக்கமாகும். இந்த வழியில் பிளாக்டிராக் செயலி உருவாக்கப்பட்டுள்ளது”, என்று முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர். கே விஜய் ராகவன் கூறினார்.