சென்னை:ஐஐடி கல்வி நிறுவனத்தின் சென்டர் ஃபார் அவுட்ரீச் அண்ட் டிஜிட்டல் எஜுகேஷன் (CODE) இப்பாடத்திட்டத்தை வழங்குகிறது. பாடத்திட்டத்தின் ஆரம்ப நிலையில் (தொகுதிகள் 1, 2) பகுப்பாய்வு அடித்தளங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும். அதனைத் தொடர்ந்து, பல்வேறு நடைமுறைப் பயன்பாடுகள் குறித்து விரிவாக தொகுதி 3ல் கற்பிக்கப்படும்.
இந்த பாடத்திட்டம் தற்போது தொழில்துறையில் எதிர்கொள்ளும் பெரும்பாலான செயல்பாடுகள் மற்றும் விநியோகச் சங்கிலி சிக்கல்கள் குறித்து விரிவான நுண்ணறிவை வழங்கும். இப்பாடத்திற்கு விண்ணப்பிக்க குறிப்பிட்ட தகுதி அளவுகோல் எதுவும் இல்லை கணிதம் மற்றும் புள்ளியியல் (Mathematics and Statistics) குறித்த அடிப்படைப் புரிதல் இதற்கு அவசியமாகிறது.
இதில் பங்கேற்போர் பகுப்பாய்வு மாதிரி உருவாக்கம் மற்றும் தரவு சார்ந்த முடிவுகளை எடுப்பதில் ஆர்வத்தோடு இருப்பது நல்லது. இந்தப் படிப்பிற்கு செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் https://code.iitm.ac.in/operations-and-supply-chain-analytics-for-strategic-decision-making என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இது குறித்து சென்னை ஐஐடி மேலாண்மைக் கல்வித் துறை பேராசிரியர் ராகுல் மராத்தே கூறும் போது, "மேலாளர்கள் கிடைக்கும் தகவல் மற்றும் தரவுகளின் அடிப்படையில் திட்டம் சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். தரவு சார்ந்த முடிவெடுக்கும் திறன், தற்போது நிறுவனங்களின் முக்கிய திறமையாகக் கருதப்படுகிறது.
முடிவெடுக்கும் அறிவியல் மேலாளர்களுக்கு உகந்த முடிவுகளை எடுக்கத் தேவையான கட்டமைப்பை உருவாக்க உதவும். இந்த கோட்பாடு கணிதம் மற்றும் அனுபவ மாதிரி போன்ற முக்கிய கூறுகளை உள்ளடக்கியதாகும். எனவே நிச்சயமற்ற தன்மை மற்றும் உகந்த முடிவு எடுப்பதில் ஏற்படும் தாக்கம் ஆகியவை குறித்த நல்ல புரிதல் அவசியமாகும்" என தெரிவித்தார்.
மேலும் மேலாளர் நிச்சயமற்ற நிலையில் முடிவெடுப்பதில் திறமையானவராக இருத்தல் அவசியம் என்றும், மேம்படுத்துதல், விளையாட்டுக் கோட்பாடு (game theory), நிகழ்தகவுக் கோட்பாடு, புள்ளிவிவர மாதிரியாக்கம் போன்ற பகுப்பாய்வுத் திறன்களை உருவாக்குவதில் இந்த பாடத்திட்டம் கவனம் செலுத்தும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் சரக்கு தேர்வுமுறை, விநியோகச் சங்கிலித்தொடர் மேலாண்மை, நெட்வொர்க் வடிவமைப்பு, தளவாடத் திட்டமிடல் மற்றும் சேவை மேலாண்மை போன்ற செயல்பாட்டு முடிவுகளை கணித ரீதியாக பகுப்பாய்வு செய்ய முடியும் என்றும். சுகாதார மேலாண்மை, வேளாண்மை, பொதுமக்களுக்கான கொள்கை போன்றவற்றில் இதே பகுப்பாய்வுக் கருவிகள் பொருத்தமாக அமைந்துள்ளன என்றும் தெரிவித்தார்.
குறிப்பாக இந்த துறைகளில் உள்ள பிரச்சனைகளும் இப்பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்றும். விநியோகச் சங்கிலி மேலாண்மையில் மாதிரிப் பயன்பாட்டை செய்துகாட்டுதல், விநியோகச் சங்கிலி மேலாண்மையில் மாறக்கூடிய மற்றும் சீரற்ற தன்மையுடன் பரிசோதித்தல், விநியோகச் சங்கிலி சிக்கலை பகுப்பாய்வு மாதிரியாக உருவாக்கி பொருத்தமான முறைகளைப் பயன்படுத்தி அவற்றைத் தீர்த்தல், குறிப்பிட்ட தொழில்கள் மற்றும் நிறுவனங்களில் விநியோகச் சங்கிலி முறைக்கு உரிய பகுப்பாய்வு முடிவெடுக்கும் கருவியை வடிவமைத்தல் போன்றவை இப்பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி ரயில் நிலையத்தில் அதிரடி சோதனை!