தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை ஐஐடியில் இந்தியா- இஸ்ரேல் தண்ணீர் தொழில்நுட்ப மையம்! - இந்தியா இஸ்ரேல் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை ஐஐடியில், 'இந்தியா - இஸ்ரேல் தண்ணீர் தொழில்நுட்ப மையம்' அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

IIT Madras
சென்னை ஐஐடி

By

Published : May 17, 2023, 5:47 PM IST

சென்னை:சென்னை ஐஐடியில், நீர்வள நிர்வாகம் மற்றும் தண்ணீர் தொழில்நுட்பங்களில் ஆய்வு மேற்கொள்ள "இந்தியா - இஸ்ரேல் தண்ணீர் தொழில்நுட்ப மையம்" அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்தை இஸ்ரேல் அரசுடன் இணைந்து சென்னை ஐஐடி அமைக்க உள்ளது. இது தொடர்பாக இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த 9ஆம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. டெல்லியில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் ஏலி கோஹென் ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் மனோஜ் ஜோஷி, சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலான் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்திய நீர் ஆதாரத் துறையில் உள்ள சிக்கல்களுக்கான தீர்வுகளைக் காண்பது, இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப இஸ்ரேலின் மிகச் சிறந்த தண்ணீர் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது உள்ளிட்டவை இந்த, இந்தியா- இஸ்ரேல் தண்ணீர் தொழில்நுட்ப மையத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த மையம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் அம்ருத் இயக்க இலக்குகளை அடைவதற்கு உதவி செய்யும் என்றும், தனித்த ஒப்பந்தங்கள் மூலம் தொழில்நுட்பத் தீர்வுகளை அமல்படுத்துவதற்கான கூட்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் பிரச்சனை, கழிவுநீர் மேலாண்மையில் புதிய அணுகுமுறைகளை உருவாக்குவது குறித்து இரு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் விவாதிப்பது, கலந்தாலோசிப்பது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் தகவல்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளவது ஆகியவையும் இந்த மையத்தின் குறிக்கோள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இஸ்ரேல் நாட்டு அரசாங்கங்கள், சென்னை ஐஐடியில் அமைந்திருக்கும் இந்தியா-இஸ்ரேல் மையத்தின் திறன் வளர்ப்பின் குறிப்பிட்ட பகுதிகளில் ஒத்துழைப்பை மிகுதியாக்குவதை நோக்கி பணியாற்றும் என்றும், எல்லா நிலையிலும் தண்ணீர் குறித்த திட்டங்களை உருவாக்கி, அதி நவீன தொழில்நுட்பங்களுடன், கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்திக் காட்டி கண்காட்சியை நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மையம் தொடர்பாக பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, மனித குலத்திற்கு இயற்கை அன்னையின் மகத்தான கொடையாகத் திகழும் தண்ணீரை முறையாக பயன்படுத்துவதற்கும், சேமிப்பதற்குமான பணியில் இந்த மையம் மிகவும் முக்கியமான ஒத்துழைப்புகளில் ஒன்று என தாங்கள் கருதுவதாக தெரிவித்தார்.

ஏற்கனவே, இஸ்ரேல் நாட்டின் வேளாண் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாய பயிற்சி அளிக்கும் மையங்கள் இந்தியாவில் உள்ளன. இந்தியா முழுவதும் 29 மையங்கள் உள்ளன. அதில், தமிழ்நாட்டில் ஆறு மையங்கள் உள்ளன. உயர் தொழில்நுட்பத்தில், மிக குறைவான தண்ணீர் மற்றும் பரப்பளவில் அதிக மகசூல் பெறுவது எப்படி? என இந்த மையங்களில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் 5% மாணவர்களுக்கு மன அழுத்தம்...6 வாரத்தில் நடவடிக்கை - ஐஐடி இயக்குநர்

ABOUT THE AUTHOR

...view details