சென்னை: சென்னை ஐஐடி, பி.எஸ். டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் (BS Degree in Data Science and Applications) என்ற நான்காண்டு பட்டப்படிப்பை, கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தியது. இப்படிப்பில் 12ஆம் வகுப்பு முடித்த யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இதற்கு வயது வரம்பு இல்லை.
மல்டிபிள் எக்ஸிட் வாய்ப்பை கொண்ட இந்தப் படிப்பில், அவரவர் தகுதிகளுக்கு ஏற்ப டிப்ளமோ, டிகிரி உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இப்படிப்பில், இதுவரை 22,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். தற்போது 17,000 மாணவர்கள் படித்து வருகின்றனர், 195 மாணவர்கள் பட்டப்படிப்பு அளவிலும், 4,500-க்கும் மேற்பட்டோர் டிப்ளமோ அளவிலும் உள்ளனர்.
இந்த நிலையில், கார்கில் (Cargill) என்ற அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம், சென்னை ஐஐடி உடன் இணைந்து பி.எஸ்.டேட்டா சயின்ஸ் அப்ளிகேஷன்ஸ் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு முழு உதவித்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. மெரிட்-கம்-மீன்ஸ் (Merit-cum-Means) என்ற இந்த கல்வி உதவித்தொகைக்கு தகுதியின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இதில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7,500 புதிய மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. 5 லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்ட மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். இது பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், சென்னை ஐஐடியில் உயர்கல்வி படிக்கப் பயனுள்ளதாக இருக்கும்.