கருப்பு பூஞ்சை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீர்வை தந்த ஐஐடி மெட்ராஸ் சென்னை: ஐஐடி மெட்ராஸ், ஜோரியாக்ஸ் இன்னோவேஷன் லேப்ஸ் உடன் இணைந்து கருப்பு பூஞ்சை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முப்பரிமாண தொழில் நுட்பத்துடன் முகஉள்வைப்புகளை உருவாக்கியுள்ளது.
மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் இப்போது புதிதாக வந்தது அல்ல. பல காலமாக இத்தகைய பாதிப்பு மனிதர்கள் மத்தியில் இருந்து வருகிறது. பாக்டீரியா, வைரஸ் போலக் காற்றிலும் நமது சுற்றுப்புறத்திலும் உள்ள பூஞ்சை கிருமிகள் நாசி வழியே உடலுக்குள் சென்று கருப்பு பூஞ்சை நோய்த் தொற்றை ஏற்படுத்துகின்றன.
இதன் தொடர்ச்சியாக இந்த நோய்த் தொற்று மெல்ல மெல்ல உடலின் அனைத்துப் பகுதிகளிலும் பரவுகின்றன. இதனைச் சரியாகக் கவனிக்காவிட்டால் அது கண்களை முதலில் பாதிக்கும். பின்னர் மூளைப் பகுதியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
இதுமட்டும் அல்லாது, உடலில் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் நபர்களுக்கு இத்தகைய தொற்று ஏற்படலாம். முறையான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், கண் பார்வை இழப்பு, உறுப்புகள் பாதிப்பு, உச்சபட்சமாக உயிரிழப்பு கூட நேரிடலாம்.
மேலும், கொரோனா தொற்றுக்குப் பிறகு, இந்தியாவில் 60,000-ம் பேருக்குக் கருப்பு பூஞ்சை நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக ஐஐடி மெட்ராஸ், ஜோரியாக்ஸ் இன்னோவேஷன் லேப்ஸ் உடன் இணைந்து கருப்பு பூஞ்சை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முப்பரிமாண தொழில் நுட்பத்துடன் முகஉள்வைப்புகளை உருவாக்கி உள்ளது.
மேலும், நோயாளியின் தோற்றத்தையும் செயல்பாட்டையும் மீட்டெடுக்க இந்த தொழில்நுட்ப நடைமுறைகள் உதவுகின்றன. இது குறித்து ஐஐடி இணைப் பேராசிரியர் முருகையன் அமிர்தலிங்கம் கூறுகையில், "கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு கருப்பு பூஞ்சை நோய் பரவ தொடங்கியுள்ளது. இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு முகத்தில் உள்ள சில எலும்புகள் அகற்றப்படுவதால், இயல்பான செயல்களை அவர்களால் செய்ய இயலாது.
மருத்துவத் தரம் வாய்ந்த டைட்டானியத்தில் இருந்து முகஉள்வைப்புகள் செய்யப்படுகின்றன. #Right2Face என்ற இந்த முன்முயற்சியின் வாயிலாகக் கருப்பு பூஞ்சை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய நோயாளிகளுக்கு முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர்களின் ஒத்துழைப்போடு தனிப்பயனாக்கத்துடன் கூடிய முகஉள்வைப்புகளை உருவாக்க முடியும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது..!