கரோனா பரவல் காரணமாக, வர்த்தக முறையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக கடைகளுக்கு சென்று ஆடை வாங்குவதைவிட, ஆன்லைனில் வாங்குவதையே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். எனவே மக்களை கவரும் வகையில், இணையத்தில் பதிவிடப்படும் ஆடைகளின் புகைப்படங்களில் 3டி தொழில்நுட்பத்தை உட்படுத்தும் வகையில், சென்னை ஐஐடி, மும்பை ஐஐடி முன்னாள் மாணவர்கள் இணைந்து ட்ரீ3டி (TRI3D) எனும் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.
மாடல்கள் புதிய ஆடைகள் அணிந்தவாறு புகைப்படங்களை எடுத்து, அதை எடிட் செய்து இணையதளத்தில் பதிவேற்றி நேரத்தை விரையம் செய்வதை எளிமையாக்கும் வகையில், விற்பனைக்கான ஆடையினை 3டி தொழில்நுட்பத்தைக் கொண்டு இணையதளத்தில் எளிதில் பதிவேற்றம் செய்ய இயலும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் சிறு தொழில்முனைவோர்கள் முதற்கொண்டு பெரிய பெரிய நிறுவனங்கள் பயனடையும் எனவும் கூறுகின்றனர்.
இதுகுறித்து பேசிய ட்ரீ3டி நிறுவனத்தின் இணை நிறுவனர் கூறுகையில், " போட்டோசூட்களை நடத்தி ஒரு நாளை வீணடிப்பதைவிட, ட்ரீ3டி நிறுவனத்தின் உதவியுடன் எளிதில் 3டி படங்களை உருவாக்க முடியும். இதனால் சிறிய டிசைனர் ஆடைகள் விற்பனை கடைகள் பயன்பெறும், இந்தியாவில் 80 ஆயிரம் ஆடைகள் ட்ரீ3டி தொழில்நுட்பத்தைக் கொண்டு பதிவேற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன" என்றார்.