சென்னை ஐஐடியின் கடல்சார் மேலாண்மை பொறியியல் துறையின் மூலம் ஓஎன்ஜிசி நிறுவனம் மும்பை கடல் பகுதியில் ஆயில் எடுக்கும் பணிகளை கண்காணிப்பதற்காக புதிய மென்பொருள் வடிவமைக்கப்பட்டு, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் ஆயிலை கண்காணிப்பதற்கு 25 ஆண்டிற்கு முன்னர் அமைக்கப்பட்ட வடிவமைப்பை மேம்படுத்தி ஆன்லைன் மூலம் கண்காணிக்கும் வகையில் புதிய சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு அளித்தார். இது குறித்து கடல்சார் பொறியியல் துறையின் தலைவர் நல்லரசு கூறும்போது, “ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கான 'கட்டமைப்பு ஒருமைப்பாடு மேலாண்மை அமைப்பு' (சிம்ஸ்) சென்னை ஐஐடியில் தொடங்கப்பட்டது. கடல்சார் சொத்துக்கள் மற்றும் கடல்சார் பொறியியல் சேவைகளுக்காக செயல்படுத்தப்படும்.
சிம்ஸ் செயல்முறையானது கட்டமைப்பு நிலையை கண்காணித்தல், மதிப்பீடு செய்தல் போன்ற கடல்சார் கட்டமைப்பின் மூலம் சரிபார்க்க பயன்படும். இதில் 330-க்கும் மேற்பட்ட இயங்குதளங்களுக்கான தரவுத்தள மேலாண்மை அமைப்பின் மேம்பாடு, குழாய் மூட்டுகளின் சோர்வுக்கான நம்பகத்தன்மை பகுப்பாய்வு திட்டத்தின் மேம்பாடு மற்றும் இடர் அடிப்படையிலான நீருக்கடியில் ஆய்வு முறையின் (RBUI) வளர்ச்சி ஆகியவை அடங்கும்.