சென்னை:சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) புத்தாக்க மைய (CFI) மாணவர்களின் வருடாந்திர ஆராய்ச்சி மாநாட்டின் இரண்டாம் நிகழ்வு, ஐஐடி வளாகத்தில் இன்று (நவ.04) நடைபெற்றது.
மாணவர்களால் உருவாக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை இதர கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு காட்சிப்படுத்தும் நோக்கத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. மேலும், 14 தொழில்நுட்ப கிளப், 7 போட்டிக் குழுக்கள் வழங்கிய சிறப்புமிக்க 73 தொழில்நுட்பத் திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இதில் முக்கியமாக, ராணுவக் கண்காணிப்புக்கான ஆளில்லா விமானங்கள் (fixed wing UAVs), சூரிய சக்தியில் இயங்கும் ரேஸ் கார், கடல்சார் ஆய்வுக்காக நீருக்கடியில் இயங்கும் தானியங்கி வாகனங்கள் உள்பட 73 தொழில்நுட்பத் திட்டங்களை காட்சிபடுத்தினர்.
இது குறித்து பேராசிரியர் பிரபு ராஜகோபால் கூறும்போது, “சிஎஃப்ஐ-யின் சமூக மற்றும் புத்தாக்க தொழில்நுட்பங்களுக்கான மதிப்புக்கும், கண்ணோட்டத்திற்கும் இந்த ஆராய்ச்சி கண்காட்சி முக்கியமான ஒன்றாகும். சிஎஃப்ஐ-யின் கிளப் குழுக்களின் ஆழ்ந்த ஆராய்ச்சி மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்த நல்வாய்ப்பாக அமைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாணவர் நிர்வாகத் தலைவர் கூறுகையில், “இந்த ஆராய்ச்சி மாநாடு மாணவர்கள், தொழில் வல்லுநர்கள், முதலீட்டாளர்களுடன் இணைந்து செயல்பட வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கலாம். எங்களின் முயற்சிகளை காட்சிப்படுத்துவதன் மூலம் தற்போதைய மாணவர்கள் புதுமையான முயற்சிகளில் எந்த அளவுக்கு ஊக்கமும், ஆர்வமும் கொண்டவர்களாக இருக்கின்றனர் என்பதை எடுத்துக் காட்டியிருக்கின்றனர்.
இந்த ஆண்டு நடைபெற்றுள்ள நிகழ்வில் தொழில்நுட்ப ரீதியாக, பரந்த அளவிலான துறைகள் மற்றும் களங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர்” எனத் தெரிவித்தார். மேலும், இது குறித்து மாணவர்கள் சிலர் கூறுகையில், “தானியங்கி ரோபோக்கள் மற்றும் வாகனங்களை உருவாக்குவதில் முன்னணியில் திகழும் டீம் அபியான் குழுவின் மாணவர்களுடன், சிஎஃப்ஐ-யில் பணிபுரிவது உண்மையிலேயே நம்ப முடியாத அளவுக்கு அறிவுசார்ந்த பயணமாகும்.
மேலும், விலை குறைந்த மருத்துவ சாதனங்களில் தொடங்கி, நிலையான போக்குவரத்துத் தீர்வுகள் வரை, தீர்வுகளைக் கொண்டுவரும் திறன் கொண்ட திட்டங்களில் மாணவர்கள் பணியாற்ற சிஎஃப்ஐ ஊக்குவிக்கிறது” என தெரிவித்தனர்.
கண்காட்சியில் இடம்பெற்ற முக்கிய கண்டுபிடிப்புகள்: சூரியசக்தியில் இயங்கும் ரேஸ் கார், சுத்தமான ஆற்றலுடன் கூடிய கப்பல்கள் மற்றும் கடல்சார் ஆய்வுக்கான நீருக்கடியில் இயங்கும் தானியங்கி வாகனம், மீண்டும் பயன்படுத்தக் கூடிய ஒலி ராக்கெட், பிரெய்லி புத்தக முன்மாதிரி, செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கான சவுண்ட்ஸ்கேப்பிங், கண் கண்காடிகள், ராணுவக் கண்காணிப்புக்கான நிலைத்த இறக்கை யுஏவி-க்கள் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"சென்னையில் அமலுக்கு வந்தது புதிய வேக கட்டுப்பாடு" - அபராதத்தை தவிர்க்க இதை கவனமாக படிங்க!