சென்னை:மின்னணு சாதனங்களில் வெப்ப மேலாண்மை என்பது மிகவும் முக்கியமானது ஆகும். குறிப்பாக சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் சிறிய ரக மின்னணு சாதனங்களில் வெப்ப மேலாண்மை முக்கியப் பங்கு வகிக்கிறது. மின்னணு சாதனங்கள், ஆட்டோமொபைல் சாதனங்கள், விமானங்கள், வெப்ப ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் போன்ற பல்வேறு பயன்பாடுகளில் இந்த வெப்ப மேலாண்மைக்காக பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது இரு கட்ட குளிரூட்டல், மினி அல்லது மைக்ரோ சேனல் வெப்ப பரிமாற்றம், ஸ்பிரே கூலிங், கேப்பிலரி ஃபேட் கூலிங் போன்ற தொழில்நுட்பங்கள் மின்னணு சாதனங்களில் வெப்ப மேலாண்மைக்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்த தொழில்நுட்பங்களில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
இந்த நிலையில், சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள கலீஃபா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து, மின்னணு சாதனங்களின் வெப்ப மேலாண்மைக்கான நுட்பங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். அதன்படி, மின்னணு சாதனங்களை திறம்பட குளிரூட்டுவதற்காக, எலக்ட்ரோ-ஹைட்ரோடைனமிக்ஸ் அடிப்படையிலான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளனர். இந்த செயல்முறையில், மைக்ரோ சேனல்களில் சுழல்களைத்(vortex) தூண்டுவதற்கு 'Onsager-Wien Effect' -ஐப் பயன்படுத்தி உள்ளனர். இந்த தொழில்நுட்பம் சிறந்த வெப்ப பரிமாற்றத்திற்கும், வெப்ப மேலாண்மைக்கும் வழிவகுக்கும் என்றும், இதற்கு குறைந்த அளவிலான மின்சாரமே போதும் என்றும், மிகவும் பாதுகாப்பானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த புதிய தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரை 'அப்ளைடு தெர்மல் இன்ஜினியரிங்' இதழில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ஆய்வை, சென்னை ஐஐடியின் அப்ளைடு மெக்கானிக்ஸ் மற்றும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் வெங்கடேசன் மற்றும் அவரது ஆராய்ச்சி மாணவர் விஷ்ணு மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கலீஃபா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அகமது அல்காபி, தீபக் செல்வகுமார் ஆகியோர் இணைந்து மேற்கொண்டு உள்ளனர்.