சென்னை: சென்னை ஐ.ஐ.டி, ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷன் மற்றும் ஆஷா ஃபார் எஜுகேஷன் அமைப்புடன் இணைந்து தமிழ்நாட்டில் ஊரகத் தொழில்நுட்ப மையங்களைத் தொடங்குகிறது. தொலைதூர, கிராமப்புற அரசுப் பள்ளிகளுக்கு கணினி, அறிவியல் கல்வியை இந்த மையங்கள் கிடைக்கச் செய்வதுடன், ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களின் திறனை வெளிக் கொணரச் செய்யவும் உதவும் வகையில் சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குநரான பேராசிரியர் வி. காமகோடி மிகுந்த முன்னுரிமை அளித்து இதனை செயல்படுத்தி வருகிறார்.
இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னையில் இருந்து 60 கி.மீ. தொலைவில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கனகம்மா சத்திரம், சீத்தஞ்சேரி ஆகிய கிராமங்களில் இரண்டு ஊரகத் தொழில்நுட்ப மையங்கள் இன்று (பிப். 11) தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளுக்கு அருகே இதேபோன்ற மேலும் பல ஊரகத் தொழில்நுட்ப மையங்களை நடப்பு ஆண்டில் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஊரகப் பகுதிகளில் தொழில்நுட்ப அறிவையும், அதன் பயன்களையும் பரவச்செய்ய இந்த மையங்கள் பெருமளவு உதவிகரமாக இருக்கும். 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவிகளுக்கு இந்த மையங்களில் பயிற்சி அளிக்கப்படும். ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷன் இந்தத் திட்டத்திற்கான நிதி உதவியை அளிப்பதுடன், தொழில்நுட்ப ரீதியான ஆதரவையும் வழங்கி வருகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முன்முயற்சியின் முக்கிய நோக்கம் குறித்தும், கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்கும் பயன்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்த சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குநரும் ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷன் இயக்குநருமான வி. காமகோடி கூறுகையில், "நம் நாட்டின் கிராம பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தரமான கல்வி மற்றும் தொழில்நுட்பம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் சென்னை ஐ.ஐ.டி பணியாற்றி வருகிறது" என தெரிவித்தார்.