சென்னை: சென்னை ஐஐடி, அரசுப் பள்ளி மாணவர்களை தேர்வுச் செய்து டீச் இன் 10 என்ற கற்க, கற்றுக்கொள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் குறித்து https://www.teachtolearn.co.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 30 கிராமப்புற மாணவர்கள் தேர்வுச் செய்யப்பட்டு, 6 மாதங்களாக சென்னை ஐஐடியை சேர்ந்த 60 மாணவர்களால் பயிற்சியும், வழிகாட்டுதலும் வழங்கப்பட்டது. மாணவர்கள் சனிக்கிழமைகளில் ஐஐடியில் வந்து கற்றுக் கொண்டுள்ளனர்.
கிராமப்புற மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சிக்கு பின்னர் ஒவ்வொருவரும் 10 நிமிட கற்பித்தல் விளக்க வீடியோகளை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் மாணவர்களுக்கான ஒட்டுமொத்த வளர்ச்சி, கிராமப்புற மாணவர்களின் அறிவை மேம்படுத்தவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
தேசிய அறிவியல் தினத்தையொட்டி (பிப்.28) நேற்று 30 அறிவியல் கற்பித்தல் வீடியோக்களை ஐஐடியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இந்த திட்டம் குறித்து சென்னை ஐஐடியின் அகடாமி கோர்சஸ் டீன் பிரதாப் ஹரிதாஸ் கூறும்போது, ’அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களே கற்பித்தலுக்கான வீடியோ தயார் செய்கின்றனர். மாணவர்கள் வீடியோ தயார் செய்யும் போது அதனை பார்த்து அவர்களுக்கும் நம்பிக்கை வந்து செய்கின்றனர். சர்வதே தரத்திலான வசதிகள் ஐஐடியில் இருக்கிறது.
மாணவர்கள் ஆசிரியர் ஆக வேண்டும் என விரும்பினால் இந்த திட்டத்தின் மூலம் அதிகளவில் உற்சாகம் கிடைக்கிறது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சி அளிக்கிறோம். அரசுப் பள்ளி மாணவர்களை ஐஐடி வளாகத்தை தெரிந்துக் கொண்டு படிப்பதற்கான ஆர்வத்தை உண்டு செய்ய அழைத்து வருகிறோம். மாணவர்கள் கற்றுக் கொண்டு அவர்களாகவே 10 நிமிடம் வீடியோ கற்பித்தல் குறித்து தயார் செய்கின்றனர்.
அரசுப் பள்ளி மாணவர்கள் பிஎஸ் டேட்டா சயின்ஸ் பாடப்பிரிவில் சேர விரும்பினால் அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். அது போன்ற அளிக்கப்பட்ட பயிற்சியால் 100 அரசுப்பள்ளி மாணவர்கள் ஐஐடி பட்டத்தை பெற உள்ளனர். தற்பொழுது நல்ல வேலை வாய்ப்பு உள்ள படிப்பாக இருக்கிறது. நிறைய கம்பெனிகளில் டேட்டா சயின்ஸ் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகளவில் இருக்கிறது. மருத்துவம், தரவுகளை அளிப்பது போன்றவற்றிக்கு இந்தப் பாடப்பிரிவு தேவைப்படுவதாக இருக்கிறது.
அனைத்துத் துறையிலும் வேலை வாய்ப்புகள் டேட்டா சயின்ஸ் படித்த மாணவர்களுக்கு உள்ளது. 12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அதன் பின்னர் சேர்க்கப்படுவாார்கள். அவர்கள் நேரடியாகவும்,ஆன்லைன் மூலமாகவும் படிப்பார்கள். டேட்டா சயின்ஸ் படிக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ், பட்டயம், பிஎஸ்சி பட்டமும், பிஎஸ் பட்டம் 4 வது ஆண்டில் வழங்கப்படுகிறது. ஓராண்டு முடிந்ததும் சான்றிதழ் பெற்றுக் கொண்டு பணிக்கு செல்கின்றனர். 30 ஆயிரம் மாணவர்கள் படித்துக் கொண்டு வருகின்றனர். ஆண்டுத்தோறும் 7 ஆயிரம் மாணவர்கள் சேர்கின்றனர். 3 ஆண்டுகள் முடிந்துள்ளது. அடுத்த ஆண்டில் 4 வது ஆண்டு முடிவடையும்.