சென்னை: ஐஐடி மெட்ராஸ் நடத்திய ஆய்வில், மைக்ரோ பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு வீடுகளில் பயன்படுத்தப்படும் முக்கியமான அதே நேரத்தில் கவனிக்கப்படாத மைக்ரோ பிளாஸ்டிக்குகள் தான் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
அவை செல்லக்கூடிய பாதை, உருமாற்றம் மற்றும் நீர் வாழ் உயிரினங்களிடமும், மனிதர்களிடமும் ஏற்படுத்தும் நச்சுத்தன்மை விளைவுகள் ஆகியவற்றை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. குடியிருப்புகளில் நடைபெறும் பல்வேறு அன்றாட செயல்பாடுகள் மற்றும் தயாரிப்புகளை விரிவாக ஆராய்ந்து, மைக்ரோ பிளாஸ்டிக் உற்பத்தியில் குறிப்பிடத்தக்கக் காரணிகளை மொத்தமாக அடையாளம் காணும்.
சுற்றுச்சூழலில் மைக்ரோ பிளாஸ்டிக் பரவுவதற்கு பங்களிக்கும் பல்வேறு ஆதாரங்களில், மாசடைந்த கழிவு நீர் ஒரு முக்கிய ஆதாரமாக நிற்கிறது என்று ஆய்வு தெரிவிக்கின்றது. அன்றாட வீட்டுச் செயல்பாடுகளான பாத்திரங்களைக் கழுவுதல், துணி துவைத்தல், குளித்தல், கழிப்பறைகளைப் பயன்படுத்துதல் போன்ற அனைத்தும் மாசடைந்த கழிவுநீரின் உற்பத்திக்குப் பங்களிக்கின்றன.
உதாரணமாக, பாத்திரங்களைக் கழுவ பிளாஸ்டிக்கால் ஆன துடைக்கும் பட்டைகள் (scouring pads) பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் மென்மையான பகுதி பாலியூரிதீன் (PU), மெஷ் பகுதி பாலிஎதிலின் (PE) ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டவை. நாட்கள் செல்லச் செல்ல ஸ்பான்ஞ் தேய்ந்து, பிளாஸ்டிக் பொருட்கள் உதிர்வதால் இரண்டாம் மைக்ரோ பிளாஸ்டிக் உருவாக்கத்திற்கு காரணமாக அமைகிறது.
ஐஐடி மெட்ராஸ் சிவில் இன்ஜினியரிங் துறையின், சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளப் பொறியியல் பிரிவைச் சேர்ந்த ஏஞ்சல் ஜெசிலீனா, கிருத்திகா, ஈஸ்வரி, வேல்மயில், அஞ்சு அன்னா ஜான் மற்றும் பேராசிரியை இந்துமதி எம்.நம்பி, உயிரிப் பொறியியல் துறையைச் சேர்ந்த சசிகலா தேவி ரத்தினவேலு ஆகியோர் இந்த மதிப்பாய்வை
மேற்கொண்டனர்.
அந்த ஆய்வின் கட்டுரை சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் மாசு ஆராய்ச்சி (https://doi.org/10.1007/s11356-023-26918-1) என்ற புகழ் பெற்ற இதழில் பிரசுரிக்கப்பட்டது. இத்தகைய மதிப்புரையின் அவசியத்தை எடுத்துரைத்த சிவில் இன்ஜினியரிங் துறையின் சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளப் பொறியியல் பிரிவு பேராசிரியை இந்துமதி எம் நம்பி கூறுகையில், "மனிதர்களில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸின் வெளிப்பாட்டுடன் தொடர்புடைய ஆபத்து தொடர்பான உண்மைகளை அறியச் சுற்றுச்சூழல் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் மற்றும் மைக்ரோ ஃபைபர்ஸ் குறித்து நிகழ் நேரத்துடன் இன்னும் விரிவான ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்.