சுவாச குழாய் வழியாக கரோனா நுரையிரலுக்கு செல்ல எத்தனை நாட்கள்; சென்னை ஐஐடி ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு சென்னை:உலகையே மிரட்டிய கரோனா தொற்றால் அனைவரும் அச்சம் அடைந்தனர். கரோனா தொற்று பாதிப்பு வந்தவர்களிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவும் வேகத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். மேலும் நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் உடலுக்குள் பரவும் வேகம் முழுமையாகக் கண்டறியப்படவில்லை. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவரின் சுவாச உறுப்புகளின் மூலம் வைரஸ் கிருமி நுரையீரலுக்குச் செல்லும் போது பாதிப்பு அதிகளவில் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் உடம்பில் உள்ள சளி நுரையீரலுக்குச் செல்வதற்கு எடுத்துக் கொள்ளும் நாட்கள் குறித்து சென்னை ஐஐடி, ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் (அமெரிக்கா) ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து சென்னை ஐஐடி டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) மற்றும் ஐஐடி மெட்ராஸ் அப்ளைடு மெக்கானிக்ஸ் துறை ஆசிரியரான மகேஷ் பஞ்சக்நுலா கூறும்போது, ”கரோனா தொற்று வைரஸ் தாக்குதலால் வருகிறது. இந்த வைரஸ் மூக்கு, தொண்டையிலிருந்து நுரையீரலின் ஆழமான பகுதிக்கு நகரும் துளிகளின் கணித மாதிரி மூலம் கடைசிக் கோட்பாட்டை ஆய்வு செய்தோம்.
கோவிட்-19 நோய்த்தொற்றின் முதல் அறிகுறிகள் தோன்றிய 2.5 முதல் 7 நாட்களுக்குள் நிமோனியா, பிற நுரையீரல் பாதிப்புகள் ஏற்படலாம். பாதிப்புக்கு உள்ளான சளித் துளிகள் மூக்கு, தொண்டையிலிருந்து நுரையீரலுக்குப் பயணிக்கும் போது நிமோனியா ஏற்படுகிறது. சளித்துகள்கள் உருவாவதை தடுக்கும் நடவடிக்கைகள் மூலம் வைரசுடன் கூடிய சளித்துகள்கள் பயணிப்பதை முதல் கட்டத்தில் குறைக்க முடியும். தும்மல், இருமல் போன்றவை மூக்கு, தொண்டையில் உள்ள பாதிக்கப்பட்ட சளியை நீர்த்துளிகள் வடிவில் வெளியேற்றும். அதனை மருந்துகள் அளித்து கட்டுப்படுத்தலாம்.
கீழ் சுவாசக் குழாய்க்கு சளித்துகள்கள் தானாக உள்ளிழுக்காமல் தவிர்க்க முடியும். கடுமையான நோய்த்தொற்றைத் தடுப்பதில் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை இந்தக் கண்டுபிடிப்பு வலுப்படுத்துகிறது. பி-லிம்போசைட்டுகள், டி-லிம்போசைட்டுகள் (அல்லது நினைவக செல்கள்) ஆகிய சிறப்பு செல்களை உடலில் உருவாக்கத் தடுப்பூசிகள் உதவுகின்றன.
டி-லிம்போசைட்டுகள் வைரஸ் பெருக்கத்தை மட்டுப்படுத்துகின்றன. பி.லிம்போசைட்டுகள் வைரசை அழிக்கும் ஆன்டிபாடிகளை உருவாக்குகின்றன. நிமோனியா, தீவிரமான நுரையீரல் நோய்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த தடுப்பூசி உதவிக்கரமாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Delhi Mayor: பேராசிரியர் டூ டெல்லி மேயர்.. யார் இந்த ஷெல்லி ஓபராய்?