சென்னை: சென்னை ஐஐடியில் புதிதாக பி.எஸ் மெடிக்கல் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் நான்கு ஆண்டு பட்டப் படிப்பும், பி.எச்.டி ப்ரோக்ராம் ஃபார் டாக்டர், எம்.எஸ்.பை ரிசர்ச் ஃபார் டாக்டர், எம்எஸ் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், பிஎச்டி ப்ரோக்ராம் ஃபார் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் கிராஜுவேட்ஸ் ஆகிய பாடப் பிரிவுகளை சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, ”சென்னை ஐஐடியில் மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல் பாடத்திட்டத்தின் நான்கு ஆண்டு பி.எஸ் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் படிப்பை அறிமுகப்படுத்தி உள்ளோம். வரும் கல்வி ஆண்டு முதல் இந்த படிப்பில் 30 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கு பி.டெக் படிப்பில் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்தப் படிப்பானது நேரடியாக நடத்தப்படும். மருத்துவ மற்றும் பொறியியல் துறையில் இது போன்ற பாடத்திட்டங்கள் உருவாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். சென்னை ஐஐடி மருத்துவம் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை புதிதாக தொடங்கி உள்ளது. மருத்துவத் துறையை மேம்படுத்த தேவையான திறன்களுடன் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களை தயார்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்தத் துறை தொடங்கப்பட்டு உள்ளது.
ஐ.ஐ.எஸ்.இ.ஆர் நடத்தும் ஆப்டிடியூட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்தப் படிப்பில் சேர பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உயிர் காக்கும் மருத்துவ சாதனங்கள், மருந்து கண்டுபிடிப்பு மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு,
அடிப்படை மருத்துவ ஆராய்ச்சி ஆகியவற்றை மாணவர்கள் வடிவமைக்கும் வகையிலும் அவர்களை தயார் படுத்தும் வகையிலும் இந்த பாடத்திட்டம் வழங்கப்படுகிறது. மருத்துவ நடைமுறைகளில் தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்த ஏதுவாக மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பது உடன் இந்தியாவில் மருத்துவ விஞ்ஞானிகளுக்கான அடித்தளத்தை அமைக்கும் பணியினை இந்தத் துறை மேற்கொள்ளும்.