சென்னை:தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு திறமைகள் இருந்தாலும் பொருளாதார வசதியின்மை, மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான தேர்வுகளுக்கான அறிவிப்புகள் குறித்த தகவல்களை சரியான நேரத்தில் பெற முடியாமை, பாடத்திட்டம் குறித்து பயிற்சி இல்லாமை, தேர்வு எழுதும் முறைக்கான பயிற்சி இல்லாதது போன்ற காரணங்களால் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கான போட்டித் தேர்வினை அரசுப் பள்ளி மாணவர்கள் எழுதாமல் இருந்தனர்.
இதனை மாற்ற வேண்டும் என்பதற்காக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 2021-22 ம் கல்வியாண்டில் 12 ம் வகுப்பு படித்த மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஐஐடியில் சேர்வதற்கான ஜெஇஇ தேர்வினை எழுதுவதற்கு பயிற்சி அளித்தனர். கடந்தாண்டு நடத்தப்பட்ட ஜெஇஇ மெயின் தேர்வில் அரசுப் பள்ளிகளில் இருந்து 690 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் 168 மாணவர்கள் அட்வான்ஸ் தேர்வினை எழுதினர். அதில் தகுதிப் பெற்ற ஒரு மாணவர் சென்னை ஐஐடியிலும், 12 மாணவர்கள் திருச்சிராப்பள்ளி என்ஐடியிலும், வாரங்கல் என்ஐடியில் ஒரு மாணவரும் சேர்ந்துள்ளனர்.
அதேபோல் தேசிய சட்டப்பள்ளியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வினை எழுதி தகுதிப்பெற்ற 4 அரசுப் பள்ளி மாணவர்கள் முதல்முறையாக திருச்சிராப்பள்ளி தேசியச் சட்டப் பள்ளியில் சேர்ந்துள்ளனர். திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தில் சேர்வதற்கான போட்டித் தேர்வினை எழுதி 6 அரசுப் பள்ளி மாணவர்கள் முதல்முறையாக சேர்ந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து 2022-23 ம் கல்வியாண்டில் ஐஐடியில் சேர்வதற்கான ஜெஇஇ மெயின் முதல்கட்டமாக ஜனவரி மாதம் நடத்தப்பட்டதில் 3625 அரசுப் பள்ளி மாணவர்களும், 2ம் கட்டமாக ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட தேர்வினை 5380 மாணவர்களும் எழுதினர். இவர்களில் கடந்த ஆண்டுகளில் பெறப்பட்ட கட்ஆப் மதிப்பெண்களின் படி 356 மாணவர்கள் மெயின் தேர்வில் தகுதிப் பெறுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வினை எழுதுவதற்கு 260 அரசுப் பள்ளி மாணவர்கள் சென்னைக்கு வர வைக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாதிரிப்பள்ளியில் உணவு மற்றும் தங்கும் வசதிகளுடன் அண்ணா பல்கலைக் கழகம், ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் இருந்தும், பயிற்சி நிறுவனங்களில் இருந்தும் வந்து பயிற்சி அளிக்க உள்ளனர். இதனால் வரும் கல்வியாண்டில் அதிகளவில் மாணவர்கள் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேர்வார்கள் என பள்ளிக்கல்வித்துறையின் மாதிரிப்பள்ளிகளுக்கான உறுப்பினர் செயலாளர் சுதன் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு ஜூன் மாதம் 4 ந் தேதி காலையில் தாள் ஒன்று காலை 9 மணி முதல் 12 மணி வரையும் , மாலை 2.30 மணி முதல் 5.30 மணி வரையில் தாள் 2 தேர்வும் நடைபெறுகிறது . இந்த 2 தாள் தேர்வுகளையும் எழுத வேண்டியது கட்டாயமாகும். இந்தத் தேர்வினை எழுதுவதற்கு ஜெஇஇ முதன்மைத் தேர்வில் தகுதிப்பெற்றவர்கள் ஏப்ரல் 30 ந் தேதி முதல் மே 7 ந் தேதி வரையில் https://jeeadv.ac.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரசு இசை கல்லூரிகளில் தவில், நாதஸ்வரம் பிரிவுகளில் பட்டப்படிப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு