2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குநர் ஐ.ஜி முருகன் மீது பெண் காவல் கண்காணிப்பாளர் பாலியல் புகார் தெரிவித்தார். புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் காவல் கண்காணிப்பாளர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், பாலியல் புகாரை விசாரிக்கும் உள்பிரிவு குழுவிடம் மீண்டும் புகார் அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டார். மேலும், தமிழ்நாடு முழுவதும் பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்களை கட்டாயம் நிறுவ வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார்.
அதிமுக அரசு மீது குற்றச்சாட்டு
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து ஐ.ஜி முருகன், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.இதேபோல பெண் காவல் கண்காணிப்பாளர் தரப்பில் ஐ.ஜி முருகன் மீதான வழக்கை வேறு மாநிலத்திக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலராக இருந்ததால் முருகன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்போதைய அதிமுக அரசு மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.மேலும் தமிழ்நாட்டில் விசாரணை நடந்தால் தனக்கு நீதி கிடைக்காது.செல்வாக்கான பதவியில் இருந்த முருகன் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்று பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.
உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினித் கோத்தாரி, கார்த்திகேயன் அமர்வு, இந்த வழக்கை தெலங்கானா மாநில காவல்துறைக்கு மாற்றம் செய்தனர். மேலும் சிறப்பு குழுவை ஏற்படுத்தி ஆறு மாதத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய தெலுங்கானா காவல்துறை இயக்குநருக்கு உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் ஐ.ஜி.முருகனுக்கு எதிரான பாலியல் வழக்கை தெலுங்கானாவுக்கு மாற்றியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த மனுவை வரும் 23ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து கொள்கிறது.
இதையும் படிங்க : பெண் எஸ்பி பாலியல் வழக்கு 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!