சென்னை:வேலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஐஎப்எஸ் (IFS) நிதி நிறுவனத்தில், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் முதலீடு செய்தனர். இந்நிலையில், இந்த நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி 84 ஆயிரம் நபர்களிடம் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி முதலீடு பெற்று ஏமாற்றியதாக ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் நிறுவனத்தின் இயக்குநர்களான லட்சுமி நாராயணன், ஜனார்த்தனன், ஜெகன்நாதன் மற்றும் ஏஜென்ட்டுகள் குப்புராஜ், சரவணகுமார் உள்ளிட்டோர் மீது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்தாண்டு வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக ஐ.எப்.எஸ் நிர்வாகிகள் 13 பேர் மீது கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஐ.எப்.எஸ் நிறுவனத்தில் 57 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக புகார்கள் வந்துள்ளதாகவும், 12 கோடி ரூபாய் மதிப்பிலான நிர்வாகிகளின் சொத்துகள் அடையாளம் கண்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பண மோசடி வழக்கு தொடர்பாக, ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்துடன் தொடர்புடைய பல்வேறு அதிகாரிகளின் சொந்த இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த வகையில், காட்பாடி வி.ஜி.ராவ் நகரில் உள்ள லட்சுமி நாராயணன் வீட்டில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடைய ஜனார்த்தனனின் வீடு, மற்றும் ஐ.எப்.எஸ் முகவர் குமாரராஜா ஆகியோர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.