சென்னை: காமராஜர் 120வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்திய பின் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பெருந்தலைவர் காமராசர், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்தது மட்டுமல்லாமல், கல்வி மேம்பாடு அடையவேண்டும் என்பதற்காக பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். அதனால்தான் கல்விக் கண் திறந்தவர் என்று சொன்னால் நாம் உடனே சொல்லக்கூடிய பெயர் பெருந்தலைவர் காமராசர்.
சேலம் பெரியார் பல்லைக்கழக தேர்வில் சாதி சர்ச்சை குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இதுதான் திராவிட மாடல் ஆட்சி. ஜாதி, மதம், மொழி இவை அனைத்தையும் கடந்ததுதான் கல்வி நிறுவனமாக இருக்கவேண்டும். உயர்க்கல்வித்துறை எந்த அளவுக்கு அக்கறை இல்லாது இருக்கிறது என்பதற்கு இது உதாரணம். ஒரு கேள்வித்தாளில் ஜாதியைக் குறிப்பிட்டு, அதுவும் ஒடுக்கப்பட்ட மக்களை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த கேள்விகளை எழுப்பியது அமைச்சர் அத்துறையில் கவனம் செலுத்தவில்லை என்றுதான் இது காட்டுகிறது. எது தாழ்ந்த ஜாதி கேட்பது என்பது வளர்ந்த இந்த சமுதாயத்தில் இதுபோன்ற கேள்வியை ஏற்றுக்கொள்ள முடியாது.
இப்போது அவர்கள் கேள்வித்தாளை நாங்கள் தயாரிக்கவில்லை என்று சொல்கிறார்கள். வேறு மாநிலம் தயாரித்தது என்று சொல்கிறார்கள். தயாரித்தாலும் இதனை யார் பார்ப்பது. உயர் கல்வித்துறை என்ன செய்கிறது. பொறுப்புகளைத் தட்டி கழிக்காமல் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வதுதான் புத்திசாலியான அரசுக்கு அடையாளமாக இருக்கும். ஆனால் இது புத்திசாலி அரசா என்றால் நிச்சயமாக இல்லை.
ஓ.பன்னீர்செல்வம் குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார்: கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, உடன் யாரும் இல்லாத சூழ்நிலையிலே ஓபிஎஸ் மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. அந்த கடிதத்தில் சென்ற வருடம் நீக்கியுள்ளதாக இருக்கிறது. கழகம் என்பது ஒரு மாபெரும் இயக்கம். பொதுக்குழு ஒன்றுகூடி 99 சதவீத நிர்வாகிகள் எடப்பாடியாரை இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்துள்ளனர்.