சென்னை:தமிழ்நாட்டில் பல்வேறு எதிர்ப்புகளை மீறி 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் நேற்று (மே 5) திரைக்கு வந்தது. இப்படத்தில் கேரளாவை சேர்ந்த 32,000 பெண்கள் மதம் மாற்றப்பட்டு, ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்க்கப்பட்டது போன்ற காட்சி இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அமைந்தகரையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு பின் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், " நம் நாடு மதச்சார்பின்மை கொண்ட நாடு. ஆனால் கடந்த காலங்களில் மத அரசியல் செய்யும் கட்சிகள் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் கொடும்பான்மையை நாம் அனைவரும் பார்க்கிறோம். இப்போது ஆட்சி நடத்துபவர்களுக்கு மதம்தான் முக்கியம், அதைத் தவிர எதுவும் அவர்களுக்கு கவலை கிடையாது.
இந்த சூழலில் பாரதிய ஜனதா கட்சி பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்க உள்ளது. அவர்களது ஆட்சி ஹிட்லரின் ஆட்சி போல் ஒரு கொடுங்கோல் ஆட்சியாய் உள்ளது. ஹிட்லருடைய ஸ்வஸ்திக் உத்திரத்தை அவர்களது கொடியில் வைத்து ஆட்சி செய்யும் இவர்களும் அதைத்தான் பின்பற்றுகின்றனர். குறிப்பாக இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் அழித்து ஒழிப்பது தான் நோக்கமாய் கொண்டுள்ளனர். தேர்தல் காலகட்டங்களில் புர்கா, காஷ்மீர் பைல்ஸ் ஆகிய படங்களை வைத்து சர்ச்சை செய்தனர். தற்போது கர்நாடக தேர்தல் வரும் சமயத்தில் கேரளா ஸ்டோரியை வைத்து சர்ச்சையில் ஈடுபடுகின்றனர்.
விடுதலைக்காக போராடிய அனைவருமே தற்போது பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் இருக்கின்றனர் அல்லது நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த நாட்டுக்காக ஒரு போராட்டம் கூட செய்யாத ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக 20 மாநிலங்களின் சட்டமன்றத்தில் உள்ளது. இதை மறுத்து என்னுடன் தொலைக்காட்சியில் வாதாட தயாராக இருக்கிறீர்களா? சாவர்க்கரை வீர மனிதர் என பொய்யாக பட்டம் கட்டி போராட்டம் செய்து நமது நாட்டுக்கே பெரிய துரோகம் செய்தது ஆர்எஸ்எஸ்.