தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தி படித்தால் வாய் பேச முடியாத அடிமைகளாக செல்ல நேரிடும் - கவிஞர் வைரமுத்து - போராட்டத்தில் வைரமுத்து

இந்தி படித்தால் வாய் பேச முடியாத அடிமைகளாக செல்ல நேரிடும் என இந்தி திணிப்பு ஆர்ப்பாட்டத்தில் கவிஞர் வைரமுத்து பேசியுள்ளார்.

16748090
இந்தி படித்தால் வாய் பேச முடியாத அடிமைகளாக செல்ல நேரிடும் - கவிஞர் வைரமுத்து

By

Published : Oct 26, 2022, 3:52 PM IST

Updated : Oct 27, 2022, 3:18 PM IST

சென்னை:ஒன்றிய அரசு இந்தி மொழியைத் திணிப்பதாகக்கூறி இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பு சார்பில் கவிஞர் வைரமுத்து தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், வி.ஜி.பி குழுமத்தலைவர் தொழிலதிபர் வி‌.ஜி.சந்தோசம், திராவிடர் இயக்கத்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், கவிஞர் முத்துலிங்கம், இயக்குநர் கெளதமன் மற்றும் தமிழறிஞர்கள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய கவிஞர் வைரமுத்து, 'வரலாற்று நெருக்கடி தமிழுக்கு நேர்ந்துள்ளது. இது புதிதல்ல, இந்தி திணிப்பதும், தமிழன் எதிர்ப்பதும் 85 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தமிழை அதிகாரத்தால், அந்நியர்கள் படையெடுப்பால், மதத்தால், சாஸ்திரத்தால் அழிக்கப்பார்த்தார்கள். இப்போது சட்டத்தால் எதிர்க்க பார்க்கிறார்கள். இந்தி தெரியாதவர்கள் ஒன்றிய அரசின் பணியில், இனி இடம்பெற முடியாது என மெல்ல மெல்ல இந்தி திணிக்கப்படுகிறது.

தாய்மொழி தமிழ், வாழ்வுக்கான மொழி; ஆங்கிலம் வசதிக்கான மொழி. தமிழ் மற்றும் ஆங்கிலத்தைப் படித்தால் வாழ்வோடும் வசதியோடும் இருக்கலாம். இந்தி படித்தால் வாய் பேச முடியாத அடிமைகளாக செல்ல நேரிடும். ஒன்றிய அரசின் பரிந்துரை வெற்றுரை, புறம் தள்ள வேண்டியது நமது கடமை. இந்தி மொழிக்கு வரலாறு குறைவு, இலக்கியங்கள் குறைவு. 5ஆயிரம் ஆண்டுகள் பழமையான தமிழை எப்படி புறம் தள்ள முடியும்?

தமிழ் மொழிக்காக அண்ணா, கலைஞர், ஸ்டாலின் உள்ளிட்டோர் இரு மொழிக்கொள்கையை கட்டிக் காக்கின்றனர். இருமொழி கொள்கை தான், எங்களது கொள்கை. ஐ.நா, மான் கி பாத் போன்ற இடங்களில் தமிழை பிரதமர் மேற்கோள் காட்டுவது மகிழ்ச்சி. ஆனால், சமஸ்கிருதத்திற்குச்செலவு செய்யும் நீங்கள் தமிழுக்கு ஏன் குறைவான செலவு செய்கிறீர்கள்?.

இந்தி திணிப்பு இதற்கு முன் வந்துள்ளது. ஆனால், அதையெல்லாம் கொசு போல நசுக்குவது கண்ணுக்குத் தெரியும். ஆனால், இப்போது இந்தி திணிப்பு வேறு வடிவத்தில் வருகிறது. 1938 மற்றும் 1965இல் நேர்ந்த இந்தி எதிர்ப்பு எழுச்சியைவிட 2022-ல் தமிழர்கள் கூடுதல் எழுச்சி பெற வேண்டும். மாராட்டிய மொழிக்குள் இந்தி மெல்ல நுழைந்தது. இப்போது பார்த்தால், மாராட்டிய மொழி கலாசாரம் எழுந்துள்ளது.

தமிழுக்கு இப்படியொரு நிலை வரும் என நினைக்கிறார்கள். ஆனால், அது நடக்காது. தமிழ் நமது அடையாளம், இந்திய ஒன்றியத்தில் தமிழ் தான் தமிழர்களின் அதிகாரம். பிள்ளைகளை தமிழில் படிக்க வையுங்கள், தமிழில் உரையாடுங்கள், தமிழை எழுத படிக்கச்சொல்லுங்கள்.

இந்தி படித்தால் வாய் பேச முடியாத அடிமைகளாக செல்ல நேரிடும் - கவிஞர் வைரமுத்து

இந்தி மீது எந்த வெறுப்பும் இல்லை. இந்தியாவில் இந்தியும் ஒரு மொழி. அண்டை மாநில மொழிகளை, சகோதரர்களை நாங்கள் மதிப்பதுபோல் இந்தியையும் மதிக்கிறோம். ஆனால், இந்தியை எந்தவிதத்திலும் திணிக்கக் கூடாது. இந்தி பேசாத மாநிலங்கள் கருத்தைக்கேட்டு விட்டுச்சட்டம் இயற்றுங்கள்” எனப் பேசினார்.

அதனைத்தொடர்ந்து பேசிய சுப.வீரபாண்டியன், 'நம் எல்லோருக்கும் முகங்கள், உருவங்கள் தான் வேறு, ஆனால் மொழி ஒன்று தான். 85 ஆண்டுகளாக இந்தி திணிப்புக்கு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால், தற்போது தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டி இந்தி எதிர்ப்புப்போராட்டம் விரிவடைந்துள்ளது.

1985ஆம் ஆண்டு போராட்டம் நடைபெற்றபோது மற்ற மாநிலங்கள் வேடிக்கை பார்த்தது. தற்போது கேரளா, ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்புக்கு எதிராகப்போராட்டம் நடைபெறுகிறது. வங்காளத்தில் ஒரு படி மேலாக அண்ணா, கலைஞரின் படம் ஏந்தி போராடி வருகிறார்கள்.

இந்தி திணிப்புக்கு எதிராக இந்தியர்களின் போராட்டமாக மாற வேண்டும். இந்தியா முழுவதும் இரு மொழி கொள்கை வரும்போது மொழிச்சிக்கல் நீங்கி இந்தியா வளர்ச்சி அடையும். தாய் மொழி காப்போம். எம்மொழி திணிப்பையும் எதிர்ப்போம்” எனப் பேசினார்.

இதையும் படிங்க: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையில் ஈபிஎஸ் ஆப்சென்ட்..?

Last Updated : Oct 27, 2022, 3:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details