சென்னை: பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வின் மூலமே இளங்கலை மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கையை நடத்த திட்டமிட்டு வருவதாக பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. அதற்கு கல்வியாளர்கள் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கு CUET- UG எனும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று, நாட்டில் உள்ள ஐஐடி, ஐஐஎம் மற்றும் மத்திய அரசின் நிதி உதவியுடன் இயங்கும் இதர தொழில்நுட்ப நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை ஜேஇஇ முதன்மை தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் இந்த மூன்று தேர்வுகளுக்கு மட்டும், ஆண்டுக்கு சராசரியாக 40 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அனைத்து இளநிலை படிப்புகளுக்கும் ஒருங்கிணைந்த பொது தகுதித் தேர்வு நடத்த பல்கலைக்கழக மானியக் குழு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்த கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ்காந்தி கூறியதாவது, "பல்கலைக்கழக மானியக்குழு தேசிய அளிவில் CUET- UG என்ற தேர்வு உடன் ஒருங்கிணைந்து நடத்துவதற்கு திட்டம் இருப்பதாக கூறியுள்ளனர். இது நடைமுறையில் சாத்தியமிருக்கிறதா? என்பது குறித்து கல்வியாளர்களிடம் ஆலோசித்தோம். இது 3 தேர்வுகளை மட்டும் தான் ஒருங்கிணைக்கப் போகின்றனரா? அல்லது சட்டம், தேசிய ஆடை வடிவமைப்பு, மாநிலங்களில் மாணவர்கள் சேர்ப்பதற்கு நடத்தப்படும் தேர்வு உள்ளிட்டவையும் நடத்தப்படுகிறது. மேலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் தனியாகத் தேர்வினை நடத்துகின்றனர். அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே தேர்வுத்தான் நடத்தப்படுகிறதா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.
இது போன்ற அதிரடியாக அறிவிப்புகள் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பாதிப்பைத்தான் ஏற்படுத்தும். நீட், ஜெஇஇ போன்ற 3 தேர்வுகளை ஒரே நேரத்தில் நடத்தும் போது சரியாக நடத்த முடியுமா? என்பது கேள்வியாகத் தான் இருக்கிறது. நீட் தேர்வில் குளறுபடிகள் நடைபெற்றன. தேர்வு மையங்கள், பணியாளர்கள் போன்றவற்றை முடிவு செய்து, கல்வியாளர்களை அழைத்து ஆராய்ந்தப் பின்னர் தான் வெளியிட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் தாக்கல் செய்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு