தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டால், கிருஷ்ணா நதிநீர் பெறப்படும்" - பொதுப்பணித்துறை! - ஏரிகளில் நீர் இருப்பு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் இருப்பு குறைந்தால், ஆந்திராவிலிருந்து கிருஷ்ணா நதிநீரை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

water
water

By

Published : Feb 28, 2023, 7:42 PM IST

சென்னை:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஆண்டு வட கிழக்குப் பருவமழை போதிய அளவுக்கு பெய்யாததால், கோடைக்காலங்களில் சென்னை நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவியது.

சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய பூண்டி உள்ளிட்ட முக்கிய ஏரிகளில் தற்போது போதுமான நீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் 138 கன அடி நீர் இருப்பு உள்ளது. இருந்தபோதும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது நீர் இருப்பு படிப்படியாக குறையும். இதனால், சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.

இந்த நிலையில், கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பிரச்னையை சமாளிப்பதற்காக, தெலுங்கு கங்கா திட்டத்தின் கீழ் கிருஷ்ணா நதிநீரை பெறுவதற்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் கூறும்போது, "தற்போது பூண்டி ஏரிக்கு நீர் வரத்து ஏதுமில்லை. அணையிலிருந்து 50 கன அடி குடிநீருக்காக வெளியேற்றப்படுகிறது. தற்போது வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளதால், வரும் மாதங்களில் நீரின் இருப்பு படிப்படியாக குறையும்.

எனவே, ஆந்திர மாநிலத்தின் நீர் பாசன அதிகாரிகளுக்கு கிருஷ்ணா நதி நீரை திறந்து விடக்கோரி கடிதம் எழுத திட்டமிட்டுள்ளோம். பூண்டி ஏரியில் தற்போது நீரின் அளவு போதுமானதாக இருக்கிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 140 அடி, தற்போது 138 அடி வரை தண்ணீர் உள்ளது. நீரின் அளவு 100 அடிக்கும் கீழ் குறைந்தால் இந்த முடிவு எடுக்கப்படும்" என்று கூறினார்.

இது குறித்து முன்னாள் சென்னை மண்டல சிறப்பு தலைமை பொறியாளர் வீரப்பன் கூறுகையில், "சென்னையில் உள்ள ஏரிகளில் நீர் இருப்பு போதுமானதாக உள்ளது. எனவே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புகள் மிக குறைவு. நீரின் இருப்பு குறையும் பட்சத்தில் கிருஷ்ணா நதிநீரை நாம் கேட்டு பெறலாம். கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் மூலம் நீர் கிடைப்பதால் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது" என்று கூறினார்.

இதையும் படிங்க: தொடங்கியது சென்னை - புதுச்சேரி இடையேயான தனியார் சரக்குக் கப்பல் போக்குவரத்து

ABOUT THE AUTHOR

...view details