சீனா உள்பட 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் கோவிட்-19 பெருந்தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளும் அதிகரித்துக்கொண்டேவருகின்றன. கோவிட்-19 தொற்று பரவலைத் தடுக்கும்விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. தமிழ்நாடு அரசு வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா தொற்று இருக்கிறதா என்பது குறித்து விமான நிலையத்தில் சோதனை செய்துவந்தது.
தற்போது, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கோவிட்-19 தொற்று பரவிவரும் சூழ்நிலையில், சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான முனையத்திலும் நவீன கருவிகளைக் கொண்டு பயணிகள் சோதனைசெய்யப்படுகின்றனர். இந்த நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், சுகாதாரச் செயலர் பீலா ராஜேஸ், விமான நிலைய இயக்குநர் சுனில் தத் ஆகியோர் ஆய்வுசெய்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், தமிழ்நாடு அரசு கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. விமான நிலைய ஆணையகமும் பொது சுகாதார மையமும் இணைந்து விமான நிலையத்தில் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன. உள்நாட்டு முனையங்களுக்குத் தினந்தோறும் 160 விமானங்கள் வருகின்றன. அதில் வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்குள்படுத்தப்படுகின்றனர்.