சென்னை:கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி அன்றைய திமுக ஆட்சி கால கட்டத்தில் கனிமவளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் சொத்துக்கள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கினை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, இருவரையும் கடந்த 2016ஆம் ஆண்டு விடுவித்து தீர்ப்பளித்தது. இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் 2017ஆம் ஆண்டு மேல்முறையீடு வழக்கை தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் வருமான வரி கணக்குகள், சொத்து விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் உள்பட லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட புலன் விசாரணையில் சேகரித்த ஆதாரங்களையும் சாட்சிகளையும் விசாரித்ததாக குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அமைச்சர் பொன்முடி, மனைவி விசாலாட்சி வருமானத்தை பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்பு துறையினர் கணக்கெடுத்துள்ளதாக கூறினார். பொன்முடியின் மனைவிக்கு சொந்தமாக 110 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகவும், தனியாக வர்த்தகம் செய்ததாகவும் கூறிய அவர் இவற்றை புலன் விசாரணை அதிகாரி கணக்கில் கொள்ளவில்லை எனவும் அதை மேற்கோள் காட்டினார்.
விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை மேலோட்டமாக விசாரித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி அளவுக்கு அதாவது 64.90 % அளவிற்கு அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவி விசாலாட்சியும் சொத்து குவித்துள்ளதாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சுமத்தி உள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபனம் ஆகியுள்ளன.