சென்னை: ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்பு, அப்பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "என்னை திமுகவினர் தாக்குகிறார்கள். உதவி செய்யுங்கள் என்று ஸ்டாலினிடம் கேட்டபொழுது நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் எனக் கூறி, அலட்சியம் காட்டினார். திமுக மீது நான் சொன்ன குற்றச்சாட்டு பொய்யல்ல. 2010ஆம் ஆண்டு திருச்சியில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும்.
திமுக தலைவர் ஜனநாயக ரீதியில் ஒரு பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை நான் முன்வைத்தேன். அதனை கருணாநிதியும் முன்மொழிந்தார். பொதுக்குழு நடந்த அதே நாளில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, திரும்பிய என் மீது கல்லை வீசி எறிந்தார்கள். இதனால், நான் வாகனத்திலிருந்து கீழிறங்கியபோது, காலணியை வீசினார்கள். என் உடையை பிடித்து இழுத்தார்கள்.
திமுகவில் இருந்த பெண்கள் ஏராளமானோர் என்னை கீழ்த்தரமாக பேசினார்கள். அப்போது, என்னுடன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்டாலினிடம் தனக்கு உதவுமாறு கேட்டேன். ஆனால் அவரோ, தான் சாப்பிட்டுக்கொண்டிருப்பதாகக் கூறிவிட்டார். இந்த நிகழ்வைக் கேள்விப்பட்ட உடனேயே அன்றைய திமுக தலைவர் கருணாநிதி, எனக்கு தொலைபேசியில் அழைத்து உதவினார்.