சென்னை:சென்னையில் திராவிடர் கழகம் சார்பில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாடு நேற்று முன் தினம் (ஜூன் 4)நடைபெற்றது. இந்த மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, வைகோ, திமுக எம்.பியும் செய்தித் தொடர்பாளருமான டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டப் பலர் பங்கேற்றனர்.
மேடையில் பேசிய டிகேஎஸ் இளங்கோவன், "நாட்டில் ஒரே மொழியாக இந்தி இருந்தால் உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும் என்று அமித்ஷா பேசியிருக்கிறார். ஆனால் அவர் இந்தியரா என்பதே எனக்கு சந்தேகமாகயிருக்கிறது. இந்தியாவை உலக அளவில் அடையாளப்படுத்துவது வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான்.
இந்தி எந்த நன்மையும் செய்யாது: நமக்கு வேறுபட்ட பண்பாடுகள், மொழிகள் இருக்கின்றன. இருந்தாலும் ஒற்றுமையாக இருக்கிறோமே அது தான் உலக அளவில் நம்மை வியந்து பார்க்க வைக்கிறது. 1947 வரை இந்தியா ஒரு நாடே இல்லை. எனக்கு ஒரு ஆசை இருக்கிறது. மொழி வழி மாநிலங்கள் இருக்கிறது. அதேபோல வடமொழிக்கென்று ஒரு மாநிலத்தை உருவாக்கிப்பாருங்கள். மனு தர்மத்தை இங்கே புகுத்துவதற்காக இந்தியை திணிக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். இந்தி என்ன செய்யும், இந்தி நம்மை சூத்திரனாக்கிவிடும். இந்தி எந்த நன்மையும் நமக்கு செய்யாது" என்றார்.
மேலும், "மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா, மராட்டியம், கர்நாடகம், குஜராத், பஞ்சாப் இவைகள் எல்லாம் வளர்ந்த மாநிலங்களாக உள்ளனவா இல்லையா? ஏனென்றால் இந்த மாநிலங்களில் இந்தி தாய் மொழி இல்லை.
இந்தியால் கலாசாரம் திணிக்கப்படும்:மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், புதிதாகப் பிரிந்த இரண்டு மூன்று மாநிலங்களில் இந்தி பேசுகின்றனர். எதற்காக நான் இந்தி படிக்க வேண்டும். நாம் மனிதர்களாக இருக்கும் வரை இதை அனுமதிக்கக்கூடாது. இதை அனுமதித்தால் நாம் மனிதர்களாக இருக்க மாட்டோம். அடிமைகளாக சூத்திரர்களாக இருப்போம். இந்தி வந்தால் நமக்குக் கேடு. நம்முடைய பெருமைகள் கெடும். நம்முடைய மரியாதை போகும்.
நான் அந்த மொழியைப் பற்றி மட்டுமே எனது கருத்தைத் தெரிவித்தேன். உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களின் வளர்ச்சிக்கு இந்தி மொழி உதவவில்லை. நம்மிடம் இருக்கும் தரவுகளை வைத்தே நான் இப்படிக் கூறினேன். வட இந்தியாவில் மனுதர்மம் கடைப்பிடிக்கப்பட்ட மக்கள் எப்படி சூத்திரர்கள் ஆக்கப்பட்டனரோ, அதேபோல இந்தி மொழி திணிக்கப்பட்டால், அடுத்து அந்த கலாசாரமும் திணிக்கப்படும். மொழியை நம் மீது திணித்தால், அது கலாசாரத்தைத் திணிக்கும் ஒரு முயற்சி. அதன் பின்னர் நாமும் சூத்திரர்களாக ஆக்கப்படுவோம்" என்று பேசினார்.
இதையும் படிங்க: 'சற்று கண்ணயர்ந்தாலும் சந்துல இந்தியை நுழைத்து விடுவாங்க' - சு.வெங்கடேசன் எம்பி