தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு, தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் கைகோர்த்தால் தமிழ்நாடு வளரும் - முதலமைச்சர் - தமிழகத் தொழில்துறை

அரசு, தொழிலதிபர்கள், தொழிலாளர் ஆகிய முத்தரப்பும் கைகோர்த்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது எப்போதும் இல்லாத அளவுக்கு உயரும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசு, தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் கைகோர்த்தால் எப்போதும் இல்லாத அளவு தமிழ்நாடு வளரும்
அரசு, தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் கைகோர்த்தால் எப்போதும் இல்லாத அளவு தமிழ்நாடு வளரும்

By

Published : Nov 18, 2022, 10:08 PM IST

சென்னையில் இன்று நடைபெற்ற தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், 'இன்றைக்கு நமது ஆட்சியின் இலக்காக, அனைத்துத் துறையிலும் வளர்ச்சி என்பதை திராவிட மாடல் கோட்பாடாக கொண்டுள்ளோம் என்றால், அதற்கு அரசியல் - சமூகவியல் மட்டுமல்ல பொருளாதாரமும் - தொழில் வளர்ச்சியும் உள்ளடங்கி இருக்கிறது.

இந்தியாவுக்குப் பல்வேறு வகைகளில் தமிழ்நாடுதான் முன்மாதிரி மாநிலம். தொழிற்சங்க இயக்கம் என்பது இங்குதான் முதன்முதலாக உருவானது. அரசியல் உரிமையை மட்டுமல்ல; தொழிலாளர் உரிமையையும் தமிழ்நாடு கேட்டுப் போராடியது.

தொழில் முதலீட்டாளர்களை ஒருங்கிணைந்து, தங்கள் தொழில்கள் சிறந்து விளங்கவும், தொழிலாளர்களுடன் ஒரு சுமூகமான சூழ்நிலையில் கொண்டு செல்லவும் EFSI அமைப்பு உருவாகியது. இன்று சுமார் பத்து லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக்கொண்டுள்ள இந்த தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பு, சிறப்பாகச் செயல்பட்டு, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கி வருவது பாராட்டுக்குரியது.

இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக, 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் புதிய தொழில்கள் இந்த 15 மாத காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழக எல்லையைத் தாண்டி பல்வேறு மாநிலத்தில் இருந்தும் வந்து நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள். பல்வேறு நாடுகளில் இருந்தும் தொழில் தொடங்க வருகிறார்கள். அந்த வகையில்தான் தொழிலதிபர்களை - தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.

அரசு, தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் கைகோர்த்தால் தமிழ்நாடு வளரும் - முதலமைச்சர்

அதே நேரத்தில், தமிழ்நாட்டில் அமைப்புசார்ந்த தொழிலாளர்களின் நலன் கருதி இத்துறையில் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் மூலமாக பல திட்டங்கள் கல்வி, திருமணம், இறப்பு இழப்பீட்டுத் தொகை, மூக்குக் கண்ணாடி வழங்குதல், ஓய்வு இல்ல வசதி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய ஓய்வு இல்லப் புனரமைப்பிற்காக நமது அரசால் தற்போது ஏழரைக் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வரக்கூடிய நிலையில், இந்த வாரியத்தின் உறுப்பினராக இணைந்து, EFSI தங்கள் பங்களிப்பை அளிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தக் கூட்டமைப்பு அனைத்து முக்கியத் தொழிற்சங்கங்களுடன் சிறந்த உறவை பேணிப் பாதுகாத்து வருகிறது. மேலும், தொழில்துறை மற்றும் பொதுவான முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள், தொழிலாளர் நலன் குறித்த விவகாரங்களில், தொழிற்சங்கத்துடன் தொடர்பு கொண்டு செயல்பட்டு வருவது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.

“தொழில் நடத்துவதில் எளிய நடைமுறை” (Ease of Doing Business) என்பதை செயல்படுத்தி வருகிறோம். இது குறித்த தகவல்களைத் தொழிலாளர் துறையின் வலை தளத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையானது தொகுத்து வழங்கி வருகிறது.

குழந்தைகள் காப்பகம் அமைத்து பராமரிக்க முடியாத தொழிற்சாலைகள் அதிலிருந்து 1 கி.மீ. தூரத்திற்குள் பொது குழந்தைகள் காப்பகம் அமைத்துக் கொள்ள மகப்பேறு நல சட்டத்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டு, வேலையளிப்போர் பங்களிப்புடன் தொழிலாளர் நலத் துறையினால் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தொழிலாளர்கள் மன அமைதியுடன் பணியாற்றவும், தங்கள் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகாணும் பொருட்டும், தொழிலாளர்களின் குறைதீர்க்கும் இணையதள வசதி தொழிலாளர் நலன்–திறன் மேம்பாட்டுத் துறையினால் ஏற்படுத்தப்பட்டு, மேம்படுத்தப்பட்ட முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையானது, வேலையளிப்போர் தாக்கல் செய்யக்கூடிய ஆண்டறிக்கைகள் மற்றும் ஒருங்கிணைந்த பதிவேடுகள் ஆகியவற்றை எளிய முறையில் சமர்ப்பிக்கும் வகையில், மேற்படி ஒவ்வொரு சட்டங்களின் கீழான நடைமுறையினை எளிமைப்படுத்தியுள்ளது. தொழிலாளர்கள் மற்றும் வேலையளிப்போருக்குத் தொழிலாளர் துறையானது பல நன்மைகளைப் பயக்கும் வகையில் ஒரு பாலமாக செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் தலைசிறந்த இடத்தைத் தமிழகத் தொழில்துறை பெற வேண்டும். அதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் அரசானது உங்களுக்கு வழங்கும். தொழிலை மட்டுமல்ல, தொழிலாளர்களையும் வளர்க்கும் கடமையும் பொறுப்பும் உங்களுக்கு உண்டு. அரசு, தொழிலதிபர்கள் - தொழிலாளர்கள் ஆகிய முத்தரப்பும் கைகோர்த்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது எப்போதும் இல்லாத அளவுக்கு உயரும்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வீடியோ; ரயிலில் மதபிரச்சாரம்... இருவர் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details