சென்னை: வானகரத்தில் உள்ள ஜே.சி கார்டன் வளாகத்தில் தென்னிந்திய திருச்சபையின் 75 ஆம் ஆண்டு பவள விழா நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது,’’நான் இல்லாமல் நீங்கள் இல்லை. நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்பதன் அடையாளமாக இந்த நிகழ்வு உள்ளது.
தென்னிந்திய திருச்சபையின் பவளவிழா தொடக்க விழாவில் கடந்த ஆண்டு நான் பேசினேன். இன்று நிறைவு விழாவில் கலந்து கொண்டுள்ளேன். பல்வேறு மாநிலங்களில் மட்டும் இல்லாமல் இலங்கையிலும் தென்னிந்திய திருச்சபை செயல்படுகிறது. 40 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இதற்கு காரணம் ஒற்றுமை உணர்வுதான். ஒற்றுமை உணர்வு தான் நம்மை எப்போதும் என்றும் காப்பாற்றும். என்ற அவர் "எல்லோரும் ஒன்றாய் இருப்பார்களாக" என்ற பைபிள் வாசகங்களை பேசினார்.
ஒற்றுமை எண்ணத்தோடு எல்லோரும் இருந்தோம் என்றால் நாடு அமைதி பூமியாக திகழும் என்பதில் துளி அளவும் சந்தேகமில்லை. இந்தியா பல்வேறு மதத்தினர் வாழும் நாடாக இருந்தாலும் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம், ஒற்றுமையாக வாழ்கிறோம். அவரவர் மத நம்பிக்கை அவரவர்களுக்கு சொந்தமானது. இது அடுத்தவர்களுக்கு எதிராக இருக்காது.
இயேசு கிறிஸ்துவின் போதனையில் அன்பு தான் மூலதனமாக இருந்தது.
எல்லா மனிதர்களும் சமம் என்பது தான் சமத்துவம், யாரையும் வேற்றுமையாக பார்க்காதது என்பதுதான் சகோதரத்துவம். அனைவருடனும் சேர்ந்து வாழ் என்பதுதான் ஒற்றுமை. ஏழைகள் மீது கருணை காட்டு என்பதுதான் இரக்கம். அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதுதான் நீதி. மற்றவர்களுக்காக வாதாடுவது தான் தியாகம் என மேற்கோள் காட்டி பேசினார்.
பசித்த வயிறுக்கு உணவாக, தவித்த வாய்க்கு தண்ணீர் ஆக, திக்கற்றவர்களுக்கு திசையாக, யாரும் அற்றவர்களுக்கு ஆதரவாக நமது அரசு செயல்பட்டு வருகிறது. அரசிற்கு அன்பும், உரிமையும் இரண்டு கண்கள் என்றார். நாம் எப்போதும் ஒன்றிணைந்து நம்முடைய ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக ஜாதி மதம் கடந்து பயணிக்க வேண்டும்’’ என்றார்.