தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு விஜய பாஸ்கர் எச்சரிக்கை! - நோயாளிகள் பாதிப்பு

சென்னை: பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால், மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் எச்சரித்துள்ளார்.

if-doctors-wont-return-to-their-duty-government-take-action-them

By

Published : Oct 29, 2019, 11:44 PM IST

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காலமுறை அடிப்படையில் உறுதியளிக்கப்பட்ட ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஐந்து நாள்களாக அரசு அங்கீகாரம் பெறாத அனைத்து மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த சில அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர்.

அரசு அங்கீகாரம் பெறாத அமைப்பாக இருந்தபோதிலும் கூட்டமைப்பைச் சார்ந்த பிரதிநிதிகளிடம் அக்டோபர் 25ஆம் தேதி அன்று சுகாதாரத் துறை செயலர், பிற துறைத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்கப்படும் என எடுத்துரைத்தனர்.

பொதுமக்களின் நலன்கருதி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட பின்னரும், போராட்டத்தில் ஈடுபட்டதுடன் எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி திடீரென சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஐந்து மருத்துவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் அரசு மருத்துவமனைகளை நாடிவரும் ஏழை எளிய நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு தொடர்ந்து எடுத்துவருகிறது.

மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிச்சயம் பரீசிலித்து நடவடிக்கை எடுக்கும். தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவப் பணி மேற்கொள்ள வாய்ப்பு பெற்றுள்ளனர். எனவே அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலிக்கும் என்று உறுதி அளித்த பின்பும் பொதுமக்களின் நலன் பாதிக்கப்படும் இத்தகைய போராட்டத்தை அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.

பொதுமக்களின் நலன் கருதி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். இல்லையென்றால் அரசு நடவடிக்கை எடுக்க தயங்காது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குட்கா வழக்கில் அமைச்சரின் பெயர்?

ABOUT THE AUTHOR

...view details